அண்மையில் அவுஸ்திரேலியாவிற்குச் சொந்தமான ”கிறிஸ்மஸ்” தீவுகளுக்கு அண்மித்த கடல்பரப்பில் பல உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் பின்னர் இந்த ஆட்கடத்தலுடன் தொடர்புடைய சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்திற்குள்ளான இந்த படகில் சுமார் 75 இலங்கையரும் பயணித்துள்ளனர். இந்தப் படகில் பயணித்த ஏனையோர் தற்போது சிவில் யுத்தம் இடம்பெற்றுவரும் சிரியாவைச் சேர்ந்தவர்களும், வன்முறைகள் இடம்பெற்றுவரும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களும் எனத் தெரியவந்துள்ளது.
கொழும்பு நகரை கேந்திரமாகக் கொண்டே இந்த ஆட்கடத்தல் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆட்கடத்தலின் பிரதான சூத்திரதாரியாக திலகரத்னம் ரவீந்திரன் எனப்படும் ‘செல்டெல் ரவி’ என்ற நபரே செயல்பட்டுள்ளார்.
இந்த நபர் மகிந்த ராஜபக்ஷவின் மைத்துனர்களில் ஒருவரும், ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகருமான திரு நடேசனின் நெருங்கிய சகா என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் தலைவர் பதவியை வகிக்கும் திரு நடேசன் இந்த ஆட்கடத்தலுக்காக ‘செல்டெல் ரவிக்கு’ அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்துள்ளார்.
ஹில்டன் விடுதியில் பல அறைகள் ‘செல்டெல் ரவி’க்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், தென் இந்தியாவிலிருந்தும் வரும் ஆட்கடத்தல் முகவர்களைச் சந்திப்பதற்கும், அவர்கள் தங்குவதற்கும் இந்த அறைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கடத்துவதற்கான முற்பணத்தை ‘செல்டெல் ரவி’ ஹில்டன் விடுதியில் வைத்தே பெற்றுக்கொண்டுள்ளார். இந்த முற்பணத்தில் பெரும்பகுதி, கடனட்டைகளின் ஊடாகவே பரிமாறப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான வசதிகளையும் திரு நடேசன் செய்துகொடுத்துள்ளார்.
இவ்வாறு கடனட்டையில் பணப் பரிமாற்றம் நடைபெறுவதால் சர்வதேச நாணய நிதியம் கொழும்பு ஹில்டல் விடுதியை தெற்காசியாவில் கறுப்புப் பட்டியல் இட்டுள்ளது.
கடனட்டை மோசடிக்காவும், பிரித்தானியாவின் போலி கடவுச் சீட்டை வைத்திருந்தத்திற்காகவும் 2003ஆம் ஆண்டு ‘செல்டெல் ரவி’ சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் ‘செல்டெல் ரவி’ விடுதலையானதை அடுத்து திரு நடேசன் அவரது சட்டவிரோத வர்த்தங்களுக்கு ரவியைப் பயன்படுத்தி வந்துள்ளார். திரு நடேசனின் போட்டி வர்த்தகர்களை அச்சுறுத்துவதற்காகவும் ‘செல்டெல் ரவி’யை திரு நடேசன் பயன்படுத்தியுள்ளார். இதற்காக இலக்கம் பதிவாகாத 10 தொலைபேசிகளையும் திரு நடேசன் ‘செல்டெல் ரவி’க்கு வழங்கியுள்ளார். இவற்றில் 9 தொலைபேசிகளை 75,000 ரூபா வீதம் ‘செல்டெல் ரவி’ விற்பனை செய்தும் உள்ளார்.
அத்துடன், பிரபல பாதாள குழு உறுப்பினர்களான ‘கிங்ஸ்பார்க் ரோஹன’ என்றழைக்கப்படும் ‘வெவ ரோஹன’ உள்ளிட்ட பாதாள குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் பாதுகாப்பாக ஹில்டன் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் திரு நடேசனின் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றனர்.
திரு நடேசனின் சட்டவிரோத செயல்பாடுகளினால் ஹில்டன் விடுதி தற்போது கொள்ளையர் கும்பல் ஒளிந்துகொள்ளும் குகையாக மாறியுள்ளது.
அத்துடன் கடல் மார்க்கமாக ஆட்களைக் கடத்துவதற்காக பொலிஸ், கடற்படை அதிகாரிகள் சிலரையும் ஹில்டன் ஹோட்டலுக்கு அழைத்து பேச்சு நடத்தி அவர்களது ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்கின்றனர்.
அதுமாத்திரமன்றி இந்த அதிகாரிகளுக்கு வெளிநாட்டு மதுபானங்களையும், வெளிநாட்டு விலை மாதர்களையும் விநியோகித்து அவர்களது ஆதரவைப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணிக்கும் அகதிகளை ஏற்றிய படகுப் பயணம் குறித்து அரசாங்க உயர் தரப்பினரும் அறிந்துள்ளனர். இலங்கை கடற்படையினர் சிலரே மலேசியாவை நோக்கி இந்தப் படகுகளைச் செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. மலேசியா சென்ற படகில் இருந்தவர்கள் அங்கே மற்றுமொரு படகிற்கு மாற்றப்பட்டு அதில் மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். பின்னரே அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளை நோக்கி குறித்த படகு பயணித்துள்ளது.
மலேசியாவில் இந்த ஆட்கடத்தலுக்கான தொடர்பாடல்களை ”டியோன்” எனப்படும் பிரபல அரசியல்வாதியொருவரே மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்குத் தேவையான ஆலோசனைகளை நுகர்வோர் விவகார அமைச்சின் ஆலோசகர்களில் ஒருவரான மொஹமட் இல்லியாஸ் என்றழைக்கப்படும் ”டிடா” என்ற நபரே ‘செல்டெல் ரவி’க்கு வழங்கியுள்ளார்.
அண்மையில் நிகழ்ந்த படகு விபத்தின் பின்னர் இதனுடன் தொடர்புடைய தரப்பினர், மற்றுமொரு படகை கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அனுப்புவதற்கும் திட்டமிட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் அகதிப் பயணத்தை மேற்கொண்டவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தின் மூலம் ‘செல்டெல் ரவி’ நவீன ரக BMW வாகனமொன்றையும் அண்மையில் கொள்வனவு செய்துள்ளார். அத்துடன், 1000 பவுண்ட் தங்க நகைகளை கொழும்பு ஹட்டன் நெஷனல் வங்கியின் பெட்டகத்தில் வைப்புச் செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அத்துடன், இந்த ஆட்கடத்தலுடன் மேலும் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் சில தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.