லண்டன்:மார்கனின் அபார பேட்டிங் கைகொடுக்க, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. “டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் “பவுலிங்’ தேர்வு செய்தார்.
மார்கன் அரைசதம்:
இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக் (40), பெல் (41) நல்ல துவக்கம் தந்தனர். டிராட் அரைசதம் அடித்தார். இவர் 54 ரன்கள் எடுத்த போது தோகர்டி “சுழலில்’ சிக்கினார். போபரா (15) ஏமாற்றினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கன், அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது.மார்கன் (89) அவுட்டாகாமல் இருந்தார்.
கிளார்க் ஆறுதல்:
சற்று கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா அணிக்கு வாட்சன் (12), பெய்லி (29) ஏமாற்றினர். வார்னர் (56) அரைசதம் அடித்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளார்க் (61) ஆறுதல் அளித்தார். பின் வந்த டேவிட் ஹசி (13), ஸ்மித் (8), வேட் (27), மெக்கே (2) என, யாரும் நிலைக்கவில்லை.
பிரட் லீ(29*) சிறிது நேரம் தாக்குபிடிக்க, ஆஸ்திரேலிய அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 257 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்டநாயகன் விருதை மார்கன் தட்டிச் சென்றார். இத்தொடரில் இங்கிலாந்து அணி 1-0, என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
