இலங்கையில் ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் படையினர் பின்தொடர்ந்து செல்லும் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இதேவேளை, சில தமிழ் செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை முக்கிய ஐந்து ஊடக அமைப்புகள் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளான ஞானசிறி கொத்திகொட, லசந்த ருகுனுகே மற்றும் லங்காதீப பத்திரிகையின் செய்தியாளர் சுஜித் மங்கள ஆகியோருக்கே இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி உட்பட உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கூறினார்கள்.
ஜனாதிபதியுடன் ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் செய்தி ஆசிரியர்களும் மாதாந்தம் நடத்துகின்ற விசேட சந்திப்புகளின் போதும் இதுபற்றிய முறைப்பாடுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் செயலாளர் அ.நிக்ஸன் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
இணையதளங்களை தடை செய்வது பற்றிய குறிப்பான சட்டவிதிகளோ அல்லது ஏற்பாடுகளோ இலங்கை அரசிடம் தெளிவாக இல்லை என்ற நிலையில், எந்த அளவுகோல்களின்படி இணையதளங்கள் முடக்கப்படுகின்றன என்ற கேள்விகள் உள்ளதாகவும் நிக்ஸன் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை ஊடக அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்படாத இணையதளங்களை தடை செய்வதற்கு தமக்கு அதிகாரம் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பொன்றின்படி, இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் இணையதளங்கள் பதிவு செய்யப்படவேண்டியது கட்டாயம் என்பது சட்டம் என்றும் அமைச்சர் தெரித்தார்.
இதேவேளை, ஊடகவியலாளர்கள் அரச புலனாய்வு பிரிவினரால் பின்தொடரப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களையும் ஊடகத்துறை அமைச்சர் மறுத்தார்.
Good news