யாழ். உதயன் பத்திரிகையின் ஆசிரியர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக யாழ். நீதவான் ஏதாவது நடவடிக்கை மேற்கொள்வதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜூன் 28 ஆம் திகதி உதயன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பாக பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கவும் வேறு நிதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, தீபாலி விஜேசுந்தர ஆகியோர் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளனர்.

ஜூலை 20 வரை அமுலில் இந்த தடையுத்தரவு இருக்கும். இந்த மனுவை தாக்கல் செய்த உதயன் பத்திரிகை ஆசிரியர் தேவநாயகம் பிரேம்நாத், யாழ். நீதவான் மா.கணேசராசாவை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனக ஈஸ்வரன், விரான் கொரயா, நிரான் அன்க்டெல் ஆகியோர் ஆஜராகினர்.

ஜூன் 27 ஆம் திகதி இராணுவம் காணிகளை பிடித்து வைத்திருப்பதற்கு எதிராக நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தமை தொடர்பான ஒரு விடயம் நீதிமன்றில் எடுக்கப்பட்ட போது நடந்தவைபற்றி தனக்கு செய்தி கிடைத்ததாக மனுதாரர் கூறியுள்ளார்.

இந்த விடயம் முன்னைய திகதியில் எடுக்கப்பட்ட போது சுமந்திரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பற்றி நீதிவானால் கூறப்பட்ட விமர்சனங்கள் தொடர்பில் அங்கு பிரசன்னமாகவிருந்த நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, நீதவான் நீதிமன்றுக்கு ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் அதிகாரம் இல்லை எனவும் மாவட்ட நீதிமன்றுக்கே அந்த அதிகாரம் உண்டு எனவும் நாடாளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி. பேசியதாக ஒரு பத்திரிகை (உதயன் அல்ல) எழுதியுள்ளதாக நீதவான் தெரிவித்ததாக மனுதார் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட நீதிமன்றம் பற்றி நாடாளுமன்றத்தில் தான் பேசவில்லை எனவும் அப்படி பேசியிருப்பினும் நாடாளுமன்ற சிறப்புரிமை காரணமாக அதை திறந்த நீதிமன்றில் விமர்சிக்க நீதவானுக்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிமன்றில் சுமந்திரன் கூறியதாக தகவல் தந்தவர் கூறினாரென மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரனின் வாதத்தை கேட்ட பினனர்; நீதவான், திறந்த நீதிமன்றில் சுமந்திரனிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல் தந்தவர் கூறியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் கிடைத்த பின், தகவலின் உண்மையை உறுதி செய்ய நீதவானை அணுக முயன்றதாகவும் ஆனால் அவருடன் தொடர்பு கிடைக்கவில்லை எனவும் இதன்பின் தான் சுமந்திரனை கேட்டபோது அவர் தகவல் தந்தவர் வழங்கிய செய்தி உண்மையானது என உறுதி செய்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன், தான் நீதவானின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும் மன்னிப்பு கேட்டமை நீதவானின் பெருந்தன்மையைக் காட்டுவதாகவும் கூறியதாக மனுதாரர் கூறியுள்ளார்.

இந்த தகவல் முக்கியமான செய்தி என்பதாலும் பொதுமக்கள் நலன் தொடர்பானது என்பதாலும் அடுத்தநாள் ஜூன் 28 ஆம் திகதி இதை பிரசுரித்ததாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

‘நாடாளுமன்றத்தில் பேசப்பட்டதை விமர்சிக்கும் அதிகாரம் நீதிமன்றுக்கு இல்லை என சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்’ என இந்த செய்திக்கு தலைப்பிட்டதாக மனுதாரர் கூறியுள்ளார்.

கட்டுரை பிரசுரிக்கப்பட்ட அன்றே, அதாவது, ஜூன் 28 பிற்பகல் 5 மணிக்கு, நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவர், ஜூன் 28 திகதியிட்டு தமிழில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை மனுதாரரிடம் ஒப்படைத்தார்.

மனுதாரரை ஜூன் 29 ஆம் திகதி காலை 9 மணிக்கு நீதிமன்றில் ஆஜாகுமாறு அதில் கோரப்பட்டிருந்தது.

ஜூன் 29இல் நீதிமன்றம் சென்ற மனுதாரர், நடந்தவற்றை நீதிமன்றில் விளக்கினார். பின்னர், பிழையான செய்தியை வெளியிட்டமைக்காக மனுதாரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதவான் கூறினாரென மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த அடிப்படையில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டதென மனுதாரரை நீதவான் வினவியதுடன், தான் தனது வாழ்க்கையில் யாரிடமும் மன்னிப்பு கோரியதில்லை எனவும் எதிர்காலத்திலும் யாரிடமும் மன்னிப்பு கோரப்போவதில்லை எனவும் நீதவான் தெரிவித்ததாக மனுதாரர் கூறியுள்ளார்.

சுமந்திரனிடம் நீதவான் மன்னிப்பு கோரியதாக பொய்யான செய்தி வெளியிட்டமைக்காக நீதிமன்றித்தில் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் மன்னிப்புக்கோரலை பத்திரிகையில் வெளியிட வேண்டுமெனவும் மனுதாரரிடம் நீதவான் கூறியதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளையில், நீதிமன்றம் உத்தரவிட்டால் அந்த உத்தரவின்படி நடப்பது தனது கடமை என மனுதாரர் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் மனுதாரரின் வழக்குரைஞரான அபிமன்னசிங்கம், தனது கட்சிக்காரர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைந்து நடக்க ஒப்புக்கொள்வதாகவும் இத்துடன் இந்த விடயம் முற்றுப்பெற்று விட்டதாக தான் கருதுவதாகவும் கூறி நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்றிலிருந்து வெளியேறினார் என மனுதாரர் கூறியுள்ளார்.

எனினும் சில வழக்குரைஞர்கள் தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்தனர். மனுதாரர் உடனேயே, திறந்த மன்றில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உதயனின் முதல் பக்கத்தில் அதை செய்தியாக வெளியிட வேண்டும் என்றும் நீதவான் பணித்ததாக மனுதாரர் கூறியுள்ளார்.

பின்னர் மனுதாரர், நீதிமன்றம் பணித்தமையால் தான் மன்னிப்பு கேட்பதாக நீதிமன்றில் கூறினார். ஆனால், இதில் திருப்தியடையாத நீதவான், திரும்பி நின்று சபையைப் பார்த்து, நீதிமன்றம் பணித்தமையால் என கூறமால் சுயமாக கூறும்வகையில் மன்னிப்பு கேட்கும்படி பணித்தார்.

பின்னர் மனுதாரர் திரும்பி சபையை பார்த்தவாறு ‘நாம் நேற்று ஒரு செய்தி வெளியிட்டோம். ஆனால், நீதவான் தான் சுமந்திரனிடம் மன்னிப்பு கேட்கவில்லை என கூறுகின்றார். ஆகவே நான் மன்னிப்பு கேட்கிறேன்’ என கூறினாரென மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி வழக்கை ஜூலை 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அத்திகதியில் மனுதாரர் தனக்கு செய்தி வழங்கியவரை குறிப்பிட வேண்டும் எனவும் ஏன் அவரை நீதிமன்றை அவமதித்ததாக குற்றஞ்சாட்டக் கூடாதென்பதற்கு காரணம் காட்ட வேண்டும் எனவும் பணித்துள்ளார் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம், இவ்வழக்கு விசாரணையை ஜூலை 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *