அர்ச்சுனன்: பகவானே! கர்மயோகமான கடமைச் செயற்பாட்டில் தீவிர விருப்பமான சுயந்ல வேட்கையை ( காமம்) அழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள்.இந்த கர்ம யோகத்தின் மரபுத்தொடர்( பரம்பரை) எப்படியானது?

கண்ணன்: அர்ச்சுனா! இந்த அழிவில்லத கர்ம யோகத்தை நான் முதலில் சூரியனுக்கு உபதேசித்தேன்.பின் சூரியன் தன் மகன் மனுவிற்கும் .மனு தன் மகன் இஷ்வகுவிற்கும் உபதேசித்தார்கள்.இவ்வாறு வழி வழியாக உபதேசிக்கப்பட்டு வந்திருக்கும் இந்த கர்மயோகத்தை உலகை ஆன்டு வந்த ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள்.பல ஆண்டுகள் கடந்து போனதால் இந்த யோகம் மனிதர்களிடம் அரிதாகி விட்டது. அர்ச்சுனா! நீ என் நெருங்கிய பக்தன் பிரியமான தோழன் இதனாலேயே இப் புராதனமான கர்மயோகத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.இது மிகவும் இரகசியமான அரியதத்துவம்.

அர்ச்சுனன்: பரம்பொருளே!நீங்கள் எந்தச் சூரியனுக்கு உபதேசித்தீர்களா அவர் வெகு காலத்தில் முன்பே பிறந்தவர்.ஆனால் நீங்கள் அவதரித்ததோ இந்தக் காலத்தில். சிருஷ்டி காலத்தில் தொடக்கத்திலே நீங்கள் இந்த அரிய யோகத்தை சூரியனுக்கு உபதேசித்ததை நான் எப்படி தெரிந்து கொள்ளமுடியுமா?

கண்ணன்: பிரதாபம் மிகுந்த வீரனே!இந்த விசயம் எனது இந்தப் பிறவியைச் சார்ந்தது அல்ல.எனக்கும் உனக்கும் பல பிறவிகள் ஏற்பட்டு விட்டன. அவையெல்லாம் எனக்குத் தெரிந்தவைதான் ஏதாவது எந்தப் பிறவியில் நீயும் நானும் என்னவெல்லாம் செய்து கொன்டிருந்தோம் என்பதை நான் நன்கு அறிவேன்.ஆனால் நீ உன் பிறவிகளையும் பிறவிச்செயல்களையும் அறியவே மாட்டாய்.

அர்ச்சுனன்: எனக்கு ஏற்பட்ட பிறவிபோல் உங்களுக்கு ஏற்படவில்லை?

கண்ணன்: இல்லை. நான் பிறப்பு இறப்புகளைக் கடந்தவன்.பிறவி இல்லாதவன்.மரணமில்லாதவன்.உயிரினங்களிற்கு எல்லாம் ஈஸ்வரன்( ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவன்)எனினும் என் வசத்திலுள்ள இயற்கை நியதியை கட்டுப்படுத்திக்கொண்டு யோக மாயையில் நான் வெளிப்படுகிறேன். ( பிறக்கிறேன் அவதாரம் செய்கிறேன்).

அர்ச்சுனன்: நீங்கள் வெளிப்படும் தருணம் எது?

கண்ணன்: பரத வம்சத்தில் உதித்த அர்ச்சுனா! எப்பொதெல்லாம் தர்மத்திற்கு கேடு ஏற்படுகிறதோ அதர்மம் மேலோங்கி பெருகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுக்கிறேன்.( விரும்பி பிறக்கிறேன்)

அர்ச்சுனன்: நீங்கள் அவதாரம் எடுப்பதால் பயன் என்ன கண்ணா?

கண்ணன்:நல்லவர்களான நன்னெறியாளர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழிப்பதற்கும்,தர்ம நெறிகளை நடைமுறைப் படுத்தி நிலை நாட்டுவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! இம்மாதிரி அடிக்கடி பிறவி எடுப்பதால் உங்களை பந்தபாசம் கட்டுப்படுத்துவது இல்லையா?

கண்ணன்: இல்லை. என்னுடைய பிறவியும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியவை. எனக்கென்று எந்தச் சுயநலமும் கொள்ளாமல் உலக நன்மைக்காகவே நான் பிறவி எடுக்கிறேன்.இந்த உண்மையை எந்த மனிதன் தத்துவ ஞானத்துடன் உணர்கிறானோ,அவன் இறந்த பின் மறுபிறவி பெறாமல் என்னையே வந்தடைகிறேன்.

அர்ச்சுனன்: அத்தகைய தத்துவஞானி உங்களையே வந்தடைகிறான் என்பதற்கு என்ன அத்தாட்சி?

கண்ணன்: அத்தாட்சி உள்ளாது.என்னோடு ஒன்றி, என்னையே புகலாக கொன்ட தத்துவஞானிகள் என் பிறப்பு இறப்புகளின் திவ்விய தன்மையை அறிந்து ளொண்டதால் புனிதர்களாகி, ஆசை,அச்சம் சினம் முதலிய தீய இயல்புகளில் இருந்து விடுபட்டு என்னையே வந்தடைகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்கள் எந்தத் தன்மையுடன் உங்களைப் புகலடைகிறார்கள்?

கண்ணன்: பார்த்தனே! உலகியல் உறவுகளோடு ஒட்டாமல் எந்தத் தன்மையுடன் என்னை மனிதர்கள் புகலடைகிறார்களோ, நானும் அவர்களுடன் அதே தன்மையுடன் தான் ஒட்டுறவு கொள்ளுகிறேன்.எனது இந்த உறவால் சம்சாரிகளான மனிதர்களிடம் சிறப்பான எதிர் விளைவுகள் ஏற்படுகிறது.நற்குணங்கள் நிரம்பிய அவர்கள் சுயநலம்,செருக்கில்லாமல் பிறருக்கு நன்மை புரிவதில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.

அர்ச்சுனன்: அச்சுதா! உங்களைப் புகலடைந்தவர்களை நீங்கள் பாசத்துடன் ஆட்கொள்கிறீர்கள். அப்படியிருந்தும் மனிதர்கள் உங்களைவிட்டு வேறு தேவதைகளைப் பூசிக்கவும் உபாசிக்கவும்செய்கிறார்களே ஏன்?
கண்ணன்:அத்தகைய மனிதர்களின் மனபாங்கில் உலகியல் ஆர்வம் ஆதிக்கம் செலுத்துகிறது.அதனால் கர்ம அனுஷ்டானங்களால் ஏற்படும்.பயனை சித்தியாக பெற விரும்புவார்கள்.இதனாலேயே அவர்கள் என்னை விட்டுவிடு பிற தேவதைகளை உபாசிக்கிறார்கள்.ஏனென்றால் இந்த மாதிரி மாநிட உலகில் கர்மாக்களில் ஏற்படும் பயன் விரைவில் கிட்டி விடுகிறது.

அர்ச்சுனன்: பகவானே! எப்படி மனிதர்கள் கர்மாக்களில் ஏற்படும் சுயநல பயனிற்காக பிற தேவதைகளை உபாசிக்கிறார்களோ, அதே போல் நீங்களும் ஏதாவது ஒரு பயனை வேண்டிய தக்க கர்மாவை செய்வதுண்டா?

கண்ணன்: நான் ஜீவன்களின் குணங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்ப நால்வகைப் பிரிவுகளை( வர்ணங்கள்,இனங்கள்) உருவாக்குகிறேன்.அவை பிராமணன், சத்திரியன்,வைசீகன்,சூத்திரன் என்னும் இனங்கள்.ஆனால் நான் படைப்பு முதலிய பணிகளை பயன் கருதியோ செருக்குடனோ செய்வதில்லை. இதேபோல் என்னைத் தத்துவ ஞானத்துடன் அறிந்துள்ள ஞானிகளும் விருப்பு வெறுப்பு இல்லாமல் செலாற்றுவதால் கர்ம பந்தங்களிற்கு ஆட்படுவதில்லை.

அர்ச்சுனன்: இதேபோல் இவ்வுலகில் எவராவது பணி புரிந்து இருக்கிறார்களோ?

கண்ணன்: செய்திருகிறார்கள். முதலில் முத்தி பெற விரும்பிய ஞானிகள் இந்தக் கர்ம தத்துவத்தை அறிந்து கொண்டு பயனில் ஆசையில்லாது பணிபுரிந்திருக்கிறார்கள்.நீயும் அந்த முன்னோர்களைப் போல் அவர்கள் காட்டிய வழியில்பணிபுரிந்து வா.

அர்ச்சுனன்: அர்த முமுசுக்கள் செய்து காட்டியதும் ,நீங்கள் உத்தரவிடுவதும் உபதேசிப்பதுமான கர்மா எனும் கடமை பணி எத்தகையது?

கண்ணன்: செயல் ( கர்மா) எது? செயலின்மை ( அகர்மா) எது? இந்த விஷயத்தில் மகா வித்துவான்களே தடுமாறி விடுகிறார்கள்.எனவே செயல் தத்துவத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.இதை உணர்ந்த நீ உலகியல் தளைகளிருந்து விடுபடுவாய்.கர்மா மூன்று வகைப்படும்.கர்மம், அகர்மம்,விகர்மம்( செயல்,செயலின்மை, தகாத செயல்).இம்மூன்று கர்ம பேதங்களையும் இவைகளின் நிலைகளையும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்.இதைத்தான் கர்ம தத்துவம் என்பர்.இது மிகவும் ஆழ்ந்த தத்துவம்.

அர்ச்சுனன்: கர்மம் அகர்மம் இவைகளில் உண்மைத் தத்துவத்தை அறிவது என்பது என்ன?

கண்ணன்: கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பது, உணர்வது செயல்படுத்துவது தான் கர்ம தத்துவம்.அதாவது செயலில் ஈடுபடும்பொது பற்றுதல் , ஒட்டுறவு இல்லாமல் இருப்பது, பற்றுதல் அற்ற நிலையில் செயற்படுவது
( நாம் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை.இக்காரியம் ந்ம்மை இதில் ஈடுபடுத்தியிருக்கிறது என்ற உணர்வுடன் செயல்படுவது).இவ்வாறு செயல் செயலின்மை இரண்டையும் ஒருநிலையில் கொண்டுள்ளவர் தான் யோகி புத்திமான்.

அர்ச்சுனன்: பகவானே! அந்தப் புத்திமானுக்குரிய சிறப்புக்கள் என்ன?

கண்ணன்: எவருடைய செயல்கள் யாவும் தன்னல முனைப்பும் தீவிர விருப்பமும் இல்லாதவையோ, மேளும் அவை நல்லறிவு எனும் தீயில் இட்டு புடம்போட்டவையோ அத்தகைய திறன் கொண்டவரை ஞானிகள்.பேரறிவாளர்கள்.பண்டிதர் என்பர். அத்திறன் தான் அவைகளுடைய புத்திசாலித்தனம் எனும் சிறப்பியல்பாகும்.

அர்ச்சுனன்: அத்தகைய சிறந்த மனிதர்களின் நிலைப்படுகள் என்ன?

கண்ணன்: செயல்திறன் கொண்ட பண்டிதர்கள் செயல் , செயலின் பயன் இரண்டிலுமே பற்றுதல் கொள்வதில்லை. மேலும் அவர்களைச் சார்ந்திருப்பதில்லை.அவர்கள் எப்போதும் மனதிருப்தியுடன் வாழ்பவர்கள். ஆகையால் அவர்கள் எல்லாம் செய்து கொண்டிருந்தாலும் எதுவும் செய்யாதவர்களாகவே இருப்பார்கள்.செயல்,செயலின்மை இருநிலைகளும் அவர்களிற்கு சமம்.

அர்ச்சுனன்:அத்தகைய சாதனையாளர்கள் செயலில் ஈடுபடாமல் இருந்துவிட்டால் என்னவாகும்?

கண்ணன்: சரீரம் ,அந்தகரணம் இரண்டையும் கட்டுபாட்டில் வைத்திருப்பவரும் .சேமித்து வைத்துள்ள சகலதையும் தியாகம் செய்பவரும்,உலகியல் ஆசைகளும் இல்லாதவருமான சாதகர் உடல் சம்மந்தப்பட்ட கருமங்களை செய்து கொண்டிருந்தாலும் கர்மபந்தத்தில் சிக்குவதில்லை.

அர்ச்சுனன்:அத்தகைய சாதகர்கள் செயலில் ஈடுபாடு கொண்டவராக இருந்தால் என்னவாகும்?

கண்ணன்: அந்தச் சாதனையாளரும் சூழ்நிலைக்கு ஏற்பதாக தம்மை மாற்றிக் கொண்டு மனநிறைவு பெறுகிறார்கள்.பொறாமை சஞ்சலம் விருப்பு வெறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.செயலின் நிறைவு ( பயன்) நிறைவின்மை (பயனின்மை)இவ்விரண்டையும் சமமாக கருதியவாறு செயலில் ஈடுபட்டு இருப்பதால் கர்ம பந்தங்கள் அவர்களை கட்டுப்படுத்துவதில்லை.மேலும் எவர் விருப்பு வெறுப்புகளை கடந்தவரோ,சுதந்திரமானவரோ எவருடைய குறிக்கோள் பரமாத்மாவை அடையும் முனைப்பு உள்ளதோ அத்தகைய சாதகர் உலக நன்மைக்காகவே செயலை புரிந்து வருவார் .ஆகையால் அவர் செயலில் ஈடுபட்டிருந்தாலும் அதில் சிக்காமல் செயலின்மை நிலையில் நிலைத்திருக்க வல்லவர்.

அர்ச்சுனன்:அச்சாதகர்கள் செய்யும் உலக நன்மைக்காக காரியங்கள் எத்தனை வகையானது?

கண்ணன்: நன்மைகள் பலவகை
1. எந்த நன்மைகளில் எல்லாச் சாதனங்களும் உபகரணங்களும்,செயல்முறையும் செய்பவரும் பிரும்ம சொரூபமான்வையோ அது பிரும்ம யக்ஞம்.

2. எதில் எல்லாமே எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவையோ, அது “பகவதர்ப்பண ரூபமான யக்ஞம்”
3. எதில் சாதகர் தம்மை பிரமத்தில் இரண்டறக் கலந்துவிடக் செய்திருக்கிறாரோ அது பேதமற்ற ” அபின்னதாரூப யக்ஞம்”
4. எந்த நற்செயலில் சாதகர் தம் ஜம்புலன்களையும் அடக்கியிருக்கிறரோ,அவைகளைத் தத்தம் பொருள்களிருந்து( விஷயங்களிலிருந்து விடுவிதிருக்கிராரோ அது” ” ஸம்யம ரூபமானயக்ஞம்”.

5.எதி சாதகர் விருப்பு வெறுப்பு இல்லாமல் அடங்கியுள்ள புலன்களால் பொருட்களில் ஈடுபடுகிறாரோ அதற்கு பெயர் விஷயஹவன ரூபயக்ஞம்
6. உயிரெ நிலைகள், புலன்கள், உள்ளம் இவைகளின் செயல்களைத் தடுத்து ,அறிவு விழிப்புடன் இருக்கும் போதே சஞ்சலம் இல்லாத திட நிலையை எட்டுவது “அமாதி ரூபமானயக்ஞம்.
7.உலக நலனிற்காக தன்செல்வத்தை செலவிடுவது ” திரவிய யக்ஞம்”
8.தன் தர்மத்தை ( அற நெறிகளை) கடைப்பிடிப்பதில் ஏற்படும் இடர்பாடுகளையும் இன்னல்களையும் மகிழ்ச்சியுடன் சகித்துக் கொள்வது ” தபோ யக்ஞம்”.

9. செய்யும் காரியம் நிறைவு பெற்றாலும் , பெறாது விட்டாலும் பயன் கிடத்தாலும் ,கிடைக்காது விட்டாலும் சமமான மனநிலையில் இருப்பது ” யோக யக்ஞம்”
10 சீரிய நெறி நூல்ககளை நற்சாத்திரங்களை கற்பதும் கற்பிப்பதும் பகவானின் திருநாமங்களை ஜெயிப்பதும் முதலான பக்தி நெறிகளை அனுட்டிப்பது ” சுவாத்யாய ரூபமான ஞானயக்ஞம்”.
11. யோக நியமங்களிற்கேற்ப பூரகம் ( மூச்சை உள்ளே இழுப்பதும்) கும்பகம் ( மூச்சை நிறுத்தி வைப்பதும்) ரேசகம்( மூச்சை வேளியே விடுவது) எனும் முறையில் ப்ராணயாமம் செய்வது பிராணாயாம ரூபமான யக்ஞம்”
12. நியம ஒழுங்கு முறை ஆகாரம் உட்கொண்டு பிராணன்களை தத்தம் இடங்களில் நிறுத்தி வைப்பது “ஷ்தம்பனவிருத்தி பிராணாயாம ரூப யக்ஞ்ம்”.

இந்த எல்லா யக்ஞங்களும் செயற்பாடுகளில் இருந்து செய்பவர்கள் ஏற்படும் ஈடுபாட்டை( பந்த பாசம்) அகற்றுவதற்குத்தான் இந்த உண்மயை உணர்ந்து யக்ஞங்களை அனுஷ்டிக்கும் சாதனையாளருக்கு எல்லா வகை பாவங்களும் அழிந்து போகின்றன.

அர்ச்சுனன்: பகவானே! பாவங்கள் அழிவதால் என்ன ஆகிறது?

கண்ணன்: குருவம்சத்து வீரனே! நான் மேற்சொன்ன யக்ஞங்களை சரியாக செய்பவர்களுக்கு அமிருத சொரூபமான பரமாத்மாவைப் பெறும் பேறு கிட்டுகிறது.ஆனால் எவ்வித யக்ஞமும் செய்யாத மனிதனுக்கு இந்த உலகம் கூட பயனிளிக்காது.பின் பரலோகம் எப்படிப்பயனுள்ளதாக அமையும்.

அர்ச்சுனன்: இத்தகைய யக்ஞகளைப் பற்றிய வர்ணனை வேறு எங்குள்ளது பகவானே?

கண்ணன்: நான் கூறிய யக்ஞங்களும் மேலும் பலவும் வேதங்களில் விரிவாக வர்ணிக்கப்பட்டுள்ளது.அவை கர்மாக்களிலிருந்து உருவானவை என்பதை அறிந்து கொள். இத்தகைய தத்துவ அறிவுடன் நீ யக்ஞத்தை செய்தால் கர்ம பந்தங்களிலிருந்து விடுபடுவாய்.

அர்ச்சுனன்: எல்லா யக்ஞங்களிலும் தலை சிறந்தது எது?

கண்ணன்: பிரதாபம் மிக்க அர்ச்சுனா!கருமங்களிலிருந்து அமையும் எல்லா யக்ஞங்களிலும் ஞானயக்ஞம் தான் சிறந்தது.ஏனெனில் ஞான யக்ஞத்தில் எல்லாக் கருமங்களிலும் பொருள்களும் அடங்கிவிடுகின்றன.

அர்ச்சுனன்: அந்த ஞானத்தை எப்படிப் பெறுவது

கண்ணன்: ஞானயக்ஞத்திற்கு அடிப்படையான மெய்யறிவு ஞானம் பெற நீ தத்துவ தரிசிகளான மகா புருஷர்களிடம் செல்ல வேண்டும்.அந்த ஞானிகளின் திருவடிகளில் தண்டனிட்டு வணங்கி ,அவர்களுக்கு தொண்டு புரிந்து அவர்களிடமிருந்து ஞானோபதேசம் பெற வேண்டும்.அவர்களிடம் ஞானப் பசியுடன் யாசித்து வேண்டிக் கொண்டால் ஞானோபதேசம் செய்தருள்வார்கள்.

அர்ச்சுனன்: அந்த ஞானிகள் உபதேசித்தருளும் ஞானத்தால் என்ன விளையும்?

கண்ணன்: அர்ச்சுனா!அந்த பரிசுத்த ஞானத்தை பெற்ற பின் உன்னை மோகம் ,மயக்கம் எதுவும் பாதிக்கமாட்டாது.அந்த ஞானத்தின் திறத்தால் நீ எல்லா ஜீவராசிகளையும் முதலில் உன்னுள் காண்பாய்.பிறகு என்னுள் காண்பாய். இதனால் எல்லா இடங்களிலும் ஒரே பரமாத்மாவின் தத்துவத்தை உணர்ந்து கொள்வாய்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த ஞானத்திற்கு மேலும் ஏதாவது மகிமையுள்ளதா?

கண்ணன்: உள்ளது.நீ எல்லாப் பாவிகளிலும் கடைசியான பாவியாகி இருந்தாலும் இந்த ஞானம் எனும் ஓடத்தால் நிச்சயம் பாவக்கடலைக் கடந்துகரையேற முடியும்.

அர்ச்சுனன்: எப்படிப் கடலை கடந்த பின் கடல் தன்னிடத்தில் இருந்தபடியே இருக்கிறதோ அதேபோல் பாவங்களை கடந்த பிறகு பாவங்கள் இந்த உலகில் இருந்து கொண்டிருக்கும் தானே?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! எப்படித் தீ காய்ந்த கட்டைகளைஎரித்து சாம்பலாக்கி விடுகிறதோ.அதேபோல ஞானமெனும் அக்கினி எல்லாக் கருமங்களையும் பாவங்களையும் பொசுக்கி விடுகிறது.ஆகையால் இந்த உலகத்தில் ஞானத்திற்கு சமமான பவித்திரமானதுவேறெதுவும் கிடையாது. இந்த ஞாத்தை கருமயோகம் மூலமாக சித்தி பெற்ற சாதகர் தாமதமாகவே அடைந்து விடுகிறார்.

அர்ச்சுனன்: கர்மயோகம் மூலமாக சித்தராகிய மனிதருக்குத்தானே ஞானம் கிட்டுகிறது என்பதை அறிந்தேன்.ஆனால் மற்ற சாதகருக்கு எப்படிப் கிட்டுகிறது?

கண்ணன்: அர்ச்சுனா! புலன்களை அடக்கி வைத்திருக்கும் சாதனையைக் புரிந்துவரும் சிரத்தையுள்ள சாதகருக்கு அந்த ஞானம் கிட்டுகிறது.ஞானம் பெற்றதும் அந்த சாதகருக்கு பேரமைதி.பரமசாந்தி கிடைக்கிறது.

அர்ச்சுனன்: இந்த ஞானத்தை பெறுவதில் ஏற்படும் தடை இடையூறுகள் எவை?

கண்ணன்: எந்த மனிதன் தானும் அறியாதிருந்து,பிறரிடமும் நம்பிக்கை ஈடுபாடு கொள்ளாமல் பிறருடைய அறிவுரையை ஏற்காமல்,தன்னுள் தன்னம்பிக்கையும் கொள்ளாது தடுமாறிக் கொண்டிருக்கிறானோ,அவனுக்கு வீழ்ச்சி நிச்சயம் சந்தேகமும் சஞ்சலும் கொண்ட மனிதனிற்கு இந்த உலகமோ,மேலுலகமோ எந்தச்சுகமும் அளிக்காது.

அர்ச்சுனன்: பகவானே! சந்தேகமும் சஞ்சலமும் விலகி விட்டால் ஆவது என்ன?

கண்ணன்: தனஞ்சயா! எந்த மனிதன் நெறியுடன் சமநிலையை மேற்கொண்டு எல்லா கருமங்களிலிருந்தும் தொடர்பில்லாமல் இருந்து வருகிறானோ, அவன் கரும தத்துவமான நல்லறிவும் , ஞானமும் மூலமாக எல்லா விதச் சந்தேகங்களையும் சஞ்சலங்களையும் அழித்து விடுகிறான் அத்தகைய சாதகருக்கு கருமபந்தம் கட்டுபடுவதில்லை.ஆகையால், பரத வம்சத்து வீரத் திருமகனே!நீ உன் உள்ளத்தில் அஞ்ஞானத்தில் ஏற்படும் சந்தேகம் ,சஞ்சலங்களை ஞானமேனும் வாள் கொண்டு அழித்துவிடு ! சமநிலையில் திடமாக இரு! கடமையை நிறைவேற்றப் போர்புரி!போரை தொடர்ந்து புரிவது உன் கடமை அதுவே உன் சத்திரிய தர்மமும் வீர இயல்பும்.

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *