தாலாட்டு பாடி தன்மடியில் எனையிருத்தி
எண்ணெய் வைத்து
என்னை என்னமாய் வளர்த்தவள் தான்
நான் உறங்க தாலாட்டு பாடியவள்
மண்ணீத்து கண்ணுறங்கி போனாள்
அவளுக்காய் மகன்பாடும் தாலாட்டு
பத்து மாதம் சுமந்து பகலிரவாய் காத்தவளே
தன் உறக்கம் மறந்தாய் காலமெல்லாம் எனக்காக
கண்ணெ நீயுறங்கு
இது பொற்காலம் கண்ணுறங்கு
பசித்த பொழுதெல்லாம் பாலூட்டி தாலாட்டி
கண்ணாக வளர்த்தாய் களைத்தாயா அம்மா கண்ணுறங்கு
எல்லோரும் என் பெருமை பேச கேட்டு பெரிதுவந்தாய்
என் மகன் இவனென்று இறுமாந்தாய்
என் இனியவளே கண்ணுறங்கு
மண்ணுறங்க மரமுறங்க மற்றவர்கள் தானுறங்க
கடமை முடிந்ததென கண்ணயர்ந்தாய் கண்ணுறங்கு
பாச மழை பொழிந்து பண்பபதனை பாலாக்கி
தாலாட்டில் தமிழ் தந்து என்னை நானாக செய்தவளே
நின் புகழை என்றும் எழுதும் என்கவிதை.
வேலணையூர்-தாஸ்