கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகவும், ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை என முந்தைய ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு நடந்தப்பட்ட ஒரு மீளாய்வு சுட்டிக்காட்டியுள்ளது.முன்பு செய்யப்பட்ட 44 ஆய்வுகளின் முடிவுகளை ஒன்றாக ஆராய்ந்து இந்த முடிவு தெரிவிக்கப்படுவதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் மருத்துவ சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஏழாயிரம் கர்ப்பிணித் தாய்களை அவதானித்து இந்த 44 ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதாலும், தனக்கும் வயிற்றில் வளரும் பிள்ளைக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிகமாக உணவு உட்கொள்ளாமல் இருப்பதாலும் கர்ப்பிணிப் பெண்கள் அளவுக்கதிகமாக உடல் எடை அதிகரிக்கின்ற பிரச்சினையைத் தவிர்க்கலாம் என்றும், மகப்பேறு தொடர்பாக ஏற்படக்கூடிய சில சிக்கல்களையும் தவிர்க்கலாம் என்றும் இந்த மீளாய்வு தெரிவிக்கிறது.
கர்ப்பிணிகள் உடல் எடையைக் குறைப்பதற்காக உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதை தற்போதைய மருத்துவ வழிகாட்டி பிரசுரங்கள் அறிவுறுத்துவதில்லை.
கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டால் அது வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்றுகூட ஆரோக்கியத்துக்கான தேசிய மையத்தின் ஆலோசனைப் பிரசுரம் ஒன்று தெரிவித்திருந்தது. பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்னரே உடல் எடையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என இதில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
அதேநேரம் கர்ப்பகாலத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமாக உடல் எடை கூடிப்போனால், நீரிழிவு நோய், இரத்த அழுத்த நோய், தாயின் உடலில் உப்புசத்து கூடிப்போய்விடுவது, முன்கூட்டியே பிரசவம் ஆகிவிடுவது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது என லண்டன் குவீன் மேரி மருத்துவமனையின் மகப்பேறு நிபுணரான டாக்டர் ஷகீலா தங்கரட்ணம் சுட்டிக்காட்டுகிறார்.
இந்நிலையில் கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாடுகள் உடல் எடையை மூலம் கட்டுக்குள் வைத்தால், இவ்விதமான பிரச்சினைகளைத் தவிர்க்க அது உதவுகிறதே ஒழிய வயிற்றிலுள்ள குழந்தையுடைய ஆரோக்கியத்தையோ தாயுடைய ஆரோக்கியத்தையோ அது பாதிக்கவில்லை என புதிய ஆய்வு தெளிவுபடுத்துகிறது
கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தவர்களுக்கு பிறக்கும் குழந்தை எடை குறைந்துவிடுகிறது என்பதற்கும் ஆதாரம் இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆனால் கர்ப்பகாலத்தில் பெண்கள் தமது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுவதாக தப்பாகப் புரிந்துகொள்ளக்கூடாது என நிபுணர்கள் சிலர் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *