காதலும் கண்ணீரும் பிரிக்க முடியாதவை! காதல் ஜெயிக்கும் போது ஆனந்தக் கண்ணீர்! அதே காதல் தோல்வியில் முடியும் போது பெருக்கெடுப்பது ஆற்றாமைக் கண்ணீர்.
இடையிடையே ஊடல், கூடல், இடைக்காலப் பிரிவு என ஜெயித்த காதல்களிலும் கண்ணீருக்கு இடமுண்டு. சில காதலர்கள் தமக்குள் தம்மை ஏமாற்றி அழ வைத்துக் கொள்வதுவும் உண்டு.
ஆனாலும் நிரந்தரப் பிரிவில் ஊற்றெடுக்கும் கண்ணீரின் கனம் தான் அதிகம். எங்கிருந்து தான் அருவி போன்று நீளமான கண்ணீர் வருகிறதோ தெரியாது? 
சூரியன் போலே அவளும் சுட்டுவிட்டுத் தொலை தூரம் மறைந்துவிட்டாள்  ஆண்கள் இதயம்  என்றால் கற்களா? எறிந்து எறிந்து போய்விட்டாள்..ஆனால் இவளுக்கு…
கண்ணீருக்குள் நினைவுகள் தத்தளித்தன!  நெஞ்சுக்குள் நினைவுகள் சுட்டெரித்தன! தொண்டைக்குள் நினைவுகள் முள்ளால் உறுத்தின! கண்ணுக்குள் நினைவுகள் நீரால் மொழிபெயர்த்தன. 
“ கண்ணீரை மட்டும் காதல் பரிசெனத் தந்து போனவளே! ஏன் என்னைக் காதலித்தாய்?” மூச்சு நிற்கும்வரை கூடவே வருவேன் என்றாயே பேச்சை மாற்றிவிட்டு போய்விட்டாயே!
பொருளாய் கொடுத்த பரிசுகளைத் திருப்பித் தந்து விட்டாய்! உணர்வுகளாய் தந்தவற்றை எப்படித் தருவாய்? அல்லாது தரத்தான் முடியுமா உன்னால்??
உதடுகளால் ஒற்றிக்கொடுத்த கைக்குட்டையை பத்திரமாய்த் தந்துவிட்டாய்! என் இதழ்கள் உறவாடிய உன் உதடுகளை உன்னால் தர முடியுமா?! உனக்குள் நானும் , எனக்குள் நீயும் சுவாசித்தோமே! அந்த மூச்சுக் காற்றின் ஸ்பரிசத்தை உன்னாள் திரும்ப தர முடியமா?
எல்லாவற்றையும் விட்டுவிடலாம். உனக்கே தாரைவார்த்துக் கொடுத்த என் பொக்கிசமாய்ப் பேணிய அந்த அன்பை எந்த ஜென்மத்தில் திருப்பித் தருவாய்?
“ என் அன்பே!” நீ என் சொத்து என்றேன். “ நடிக்காதே” என்று நீ வெடித்தாய்! உன்னைப் பிடிக்காமலே என் அன்பைப் பறிகொடுத்த என்னை, நீ கடினமாக்கியது நிஜம்தான்! 
கண்ணீரில் நான் நனைந்து கொண்டிருக்க, பன்னீரில் நீ குளித்து மணக்கோலத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பாய்!
உன் காதல் கைக்குட்டை! வேலை முடிய வீசிவிட்டுப் போவாய்! ஆனால் பாவி எனக்கோ காதல் இதயம்! இறக்கிவைத்தால் இறந்து போவேன்.
துக்கம் பீறிட்டது. தீயை மூட்டிவிட்டு அணைக்காமல் சென்று விட்டாள். தோலை உரித்துவிட்டு பழத்தை புசிக்ககாமல் மறைந்துவிட்டாள்.  காதலெனும் வெள்ளத்தில் என்னை இறக்கிவிட்டு கரை சேர்க்காமல் கைவிட்டுச் சென்றுவிட்டாள்.
தட்டித் தடுமாறி கரை சேர்ந்தாலும் அவள் மேல் கோபம் வரவில்லை. அது அவள் குறும்புத் தனமாக இருக்கக் கூடாதா என ஏக்கம் தான் வருகிறது. கள்ளங்கபட மற்ற சிரிப்பு மொத்தமும் ஒரே நாளில் என்னை அழவைக்கத்தானா?
காதல் நினைவுகள் துரத்துகின்றன.. காமம் அவனை வருத்துகின்றது! நள்ளிரவு அவனைக் கொல்கிறது. உயிரையும் உடலையும் பிழிகிறது! காதலில் பிரிவு இதமானது… அதுவும் எல்லை மீறினால்… என்ன கொடுமை.
அவன் கண்ணீர் தடைப்படாத மடை திறந்த வெள்ளாமாக கட்டுக்கடங்காமல் பாய்கின்றது. கரைதான் எங்கோ…..?
அவன் உடலும் உயிரும் உருகித் தேடிக்கொண்டே இருந்தன. அவன் கண்ணீர் இரவை ஈரமாக்கியது. அவன் சோகம் இரவை நெகிழ வைத்தது.
காதலையும் காமத்தையும் பாதி நீந்திவிட்டு மீதியைக் கடக்க முடியாமல் கண் விழித்திருந்தான்.
காமக் கடும்புனல் நீந்திக் கரை கானேன்
  யாமாத்தும் யானே உளேன்”
அதிகாரம்:117    குறள்: 1167

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *