சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா, பந்து கோல் கோட்டை கடந்ததா இல்லையா என்பதைக் கண்டறிய புதிய தொழில் நுட்பத்தை அடுத்த உலகக் கோப்பை போட்டிகளின் போது அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அயர்லாந்துக்கு இடையேயான ஒரு ஆட்டத்திலும், அதே போல அண்மையில் முடிவடைந்த யூரோ 2012 போட்டிகளின் போது ஏற்பட்ட ஒரு சர்ச்சையும் ஃபிஃபா இந்த முடிவுக்கு வருவதற்கு முக்கிய காரணங்களாக இருந்துள்ளன.
அந்த இரு சந்தர்ப்பங்களிலும், பந்து கோல் கோட்டை கடந்த போதிலும், கள நடுவரால் அது அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து ‘கோல் லைன் டெக்னாலஜி’ எனப்படும் ஒரு தொழில்நுட்பத்தை 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளின் போது ஃபிஃபா அறிமுகப்படுத்துகிறது.
பந்துக்குள் மின்னணு கருவிகள்
போட்டிகளில் விளையாடப்படும் பந்துகளுக்குள் ஒரு சிறிய மின்னணு தகடு(மைக்ரோ சிப்) பொறுத்தப்படும். அதே போல் கோல் கம்பத்திலும் இது போல பொறுத்தப்பட்டு இரண்டும் ஒருங்கிணைக்கப்படும்.
இதன் மூலம் பந்து கோல் கோட்டை கடக்கும் போது, நடுவர்களுக்கு மின்னணு சமிஞ்ஞை கிடைக்கும். அதை வைத்து அவர்கள் முடிவெடுப்பார்கள்.
இது வரவேற்கத்தக்க ஒரு முன்னேற்றம் என்றாலும், இது எந்த அளவுக்கு வெற்றி அளிக்கும் என்பது, எதிர்வரும் உலகக் கோப்பை போட்டிகளின் போது தெரியவரும் எனறு பிபிசி தமிழோசையிடம் கூறினார் சென்னையைச் சேர்ந்த சர்வதேச கால்பந்து நடுவரான கே சங்கர்.
எனினும் கூடுதலான தொழில்நுட்பங்களை ஃபிஃபா முன்னெடுத்துக் கொண்டே போனால், அது விளையாட்டின் நளினத்தை குறைத்துவிடக் கூடிய வாய்ப்பும் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.