ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் டி.வி., உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெயா டி.வி. ரஜினி நடிப்பில், அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் உருவாகிவரும் படம் கோச்சடையான். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் ஆதி, சரத்குமார், ஷோபனா, ருக்மணி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் என்று ‌ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்ச்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது. இதனிடையே இப்படத்தின் வியாபார தகவலை ஈராஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது, ரஜினியுடன் கைகோர்த்து படம் பண்ணியது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினியின் முந்தைய படங்களான சிவாஜி, எந்திரன் படங்களை போன்று கோச்சடையான் படமும் மாபெரும் வெற்றி பெறும் என்று நம்புகிறோம். கோச்சடையான் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளோம். இப்படத்தின் டிவி உரிமையை ஜெயா டி.வி, வாங்கி இருக்கிறது. தெலுங்கு உரிமையை கணபதி பிலிம்ஸ் பெற்றிருக்கிறது. மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டோக்கியோவிலும், பிரிமியர் காட்சிகளை லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈராஸ் நிறுவனம், கார்பன் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து கோச்சடையான் மொபைல் என்ற பெயரில் புதிதாக 5 லட்சம் ‌போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கோச்சடையான் போனில் கோச்சடையான் படத்தின் பட ஸ்டில்ஸ், டிரைலர், பாடல்கள், ஸ்கிரீன் சேவர், ரஜினியின் வசனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களும் இந்தபோனில் நிறைந்து இருக்கும். மேலும் டிஜிட்டல் முறையில் ரஜினிகாந்தின் கையெழுத்து மொபைலின் பின்புற பேனலில் அச்சிடப்பட்டு இருக்கும். இந்த மொபைல் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் கோச்சடையான ஆடியோ ரிலீஸின் போது வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருந்த கோச்சடையான படம், கிராபிக்ஸ் உள்ளிட்ட காட்சிகள் படத்தில் அதிகம் இருப்பதால் அதற்கான வேலையும் முடிய கால தாமதம் ஆகும் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்றும், ரஜினியின் பிறந்த நாளான 12-12.2012 அன்று இப்படத்தை வெளியிடக்கூடும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *