மும்பை: சச்சின் வழியில் அசத்த காத்திருக்கிறார் அவரது மகன் அர்ஜுன். மும்பை கிரிக்கெட் (எம்.சி.ஏ.,)சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். இவரது மகன் அர்ஜுனும் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமாக உள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர், வேகப்பந்துவீச்சிலும் வல்லவர். மும்பையில் உள்ள திருபாய் அம்பானி பள்ளியில் படிக்கும் இவர், சமீபத்தில் உள்ளூர் கிளப் அணிக்காக பங்கேற்று சதம்(124 ரன்) விளாசினார்.
இந்நிலையில், அடுத்த மாதம் எம்.சி.ஏ., சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம் நடக்க உள்ளது. இதற்கான 32 பேர் கொண்ட உத்தேச அணியில் அர்ஜுனும் இடம் பெற்றுள்ளார். இது குறித்து எம்.சி.ஏ., இணை செயலர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் ஷெட்டி கூறுகையில்,””கோடை கால கிரிக்கெட் தொடரில் அர்ஜுன் சிறப்பாக செயல்பட்டார். ஐந்து போட்டிகளில் 250 ரன்களுக்கும் மேல் எடுத்தார். இதன் அடிப்படையில் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜூலை 3ம் தேதி பயிற்சி துவங்கும், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *