சிகாகோ : சிகாகோ இந்துக் கோயிலில் ஜூன் 02ம் தேதியன்று பிரபல கர்நாடக இசைப் பாடகர் ஜேசுதாசின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. டாக்டர் கீதா கிருஷ்ணன், சிகாகோ இந்துக் கோயிலுடன் இணைந்து இக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார். தோடி ராகத்தில் அமைந்த வர்ணத்துடன் தனது கச்சேரியை துவங்கிய ஜேசுதாஸ், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்கள் மற்றும் கீர்த்தனைகளை பாடினார். தியாகராஜரின் பாலகனகமயாவை தொடர்ந்து சங்கராபரனத்துடனான தனியாவர்த்தனம் அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. அவர் ஹரிவராசனம் பாடிய போது அரங்கில் பக்தி வெள்ளம் நிறைந்தது. ஜெய சங்கர பாலனின் வயலின் இசையும், நந்தகுமார் சங்கரநாராயணனின் மிருதங்க இசையும், பாலஜி சந்திரனின் கடமும் கைதட்டல்களை அள்ளி குவித்தது. சிகாகோ இசைகலைஞரான ஹரிஹரன் ரவி, நிகழ்ச்சியின் நிறைவில் ஜேசுதாசிடம் ஆசி பெற்றது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. ஜேசுதாஸ் தான் பாட துவங்குவதற்கு முன் தனது இறை அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். சுமார் 680 பேர் இவ்விழாவில் கலந்து கொண்டு ஒன்றரை மணிநேரம்இசை அமுதம் பருகினர். ஜேசுதாசின் மிகப் பெரிய ரசிகையாகிய கல்யாணி கிருஷ்ணன், ஜேசுதாசிற்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆலய தலைவர் கோபால் ஸ்ரீநிவாசன், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்குமம்நன்றி தெரிவித்துக் கொண்டார்.
