சிங்கப்பூர்: சிங்கப்பூர் தங்கமீன் வாசகர் வட்டத்தின் இரண்டாம் சந்திப்பு தேசிய நூலக வாரியத்தின் பொது நூலகத்தில் நடந்தது. சிறப்புப் பேச்சாளரின் உரை, குறிப்பிட்ட கருப்பொருளில் அமைந்த சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டுச் சிறுகதைகளைப் பற்றிய அலசல், அதே கருப்பொருளில் அமைந்த குறும்படத் திரையிடல் மற்றும் அதைப் பற்றிய கலந்துரையாடல் என்று தங்கமீன் வாசகர் வட்ட சந்திப்புகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் வாசகர்கள் சிறுகதை எழுத ஊக்குவிக்கபடுகிறார்கள்.
ஓரு மூத்த எழுத்தாளர் அந்தக் கதைகளை அலசி ஆராய்ந்து சிறந்த இரண்டு கதைகளை தேர்ந்தெடுக்க, அந்த இரண்டு கதைகளுக்கு தலா $50 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. ஒரு வருடம் முழுவதிற்குமான பரிசுத் தொகையை வழங்க சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் முன் வந்துள்ளது.
‘நம்பிக்கைகள் / மூட நம்பிக்கைகள்’ என்பதே இந்த மாதத்திற்கான கருப்பொருள். தேர்வுக்கு வந்த சிறுகதைகளை ஆய்வு செய்து, பாரதி மூர்த்தியப்பன் எழுதிய ‘ஒற்றை மைனா’ மற்றும் தேசிய தொழில்நுட்ப கல்விக்கழக மாணவரான நா.பாலா எழுதிய ‘கோழியின் டை என்கிற மந்திரச் சொல்’ என்ற கதைகளை பரிசுக்குரியதாக எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் தேர்ந்தெடுத்தார்.
மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரான், ‘சிங்கப்பூர் சிறுகதைகளுக்கான கருவும், களமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். வாசகர்கள், இராம கண்ணபிரானிடம் கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றதோடு, தங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள். ‘நம்பிக்கை’ என்ற கருப்பொருளில் அமைந்த, நூர்ஜஹான் சுலைமானின் ‘கருகமணி’ என்ற கதையை வாசகர்கள் அலசி ஆராய்ந்தார்கள். ‘மூடநம்பிக்கை’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட தீபம் நா.பார்த்தசாரதியின் கதை பற்றியும் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
திரையிடப்பட்ட ‘துரும்பிலும் இருப்பர்’ என்ற குறும்படம், சாத்தான்களின் நம்பிக்கையை நகைச்சுவையாக விவரித்ததை வாசகர்கள் ரசித்தார்கள். தங்கமீன் இணைய இதழ் ஆசிரியர் பாலு மணிமாறன் நிகழ்ச்சியை வழிநடத்தினார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞர் அமலதாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த வாசகர் வட்ட சந்திப்பில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அடுத்த மாத சிறுகதைக்கான கருப்பொருளாக ‘நவீன யுகம்’ என்ற தலைப்பு வழங்கப்பட்டது.
– சிங்க்பூரிலிருந்து பாலு மணிமாறன்