சூரியவன் வானொலியின் அறிவிப்பாளரும்
வைத்தியருமான மணிவண்ணன்
தினக்குரலின்
சகோதர
வெளியீடான உதயசூரியன்
பத்திரிகைக்கு அளித்த நேர்காணல்.

நேர்காணல்:எஸ்:ரோஷன்

சூரியன் வானொலியின் இரவுகளை இனிமையாக்கி அதிகாலையை ரம்யமாக்குபவர் அறிவிப்பாளர் மணிவண்ணன்.
அறிவிப்பாளராக பலராலும் அறியப்பட்டிருக்கும் மணிவண்ணன் தொழில் ரீதியாக ஒரு மருத்துவர், அதுமட்டுமல்ல அறிவிப்பாளர், கவிஞர், நல்ல ரசனையாளர் என பல ஆற்றல்களை தனக்குள்ளே கொண்டுள்ளார்.
விடிய விடிய இரவுச்சூரியன் நிகழ்ச்சியில் அட்டகாசமான பாடல்களை, நேரமறிந்து ரசிகர்களின் ரசனையறிந்து ஒலிபரப்பி அதிகாலையில் கவிதையோடு கீதம் கலந்து காற்றலையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மணிவண்ணன் இந்த
வார உதயசூரியனில் உங்களோடு!
ஹா.. நான் நவரத்தினம் மணிவண்ணன் எனது சொந்த ஊர் யாழ்ப்பாணத்தின் வேலணை.
வேலணை ஜயனார் வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியை கற்றேன். பின்பு வேலணை மத்திய கல்லூரியிலும் யாழ். பற்றிக்ஸ் கல்லூரியிலும் கல்வியை தொடர்ந்து பின்னர் மருத்துவக் கல்லூரியில் கற்றேன் . தற்போது நான் மருத்துவத் துறையில் பட்டம் பெற்று மருத்துவத்துறையில் பணியாற்றுகிறேன்.

வைத்தியத் துறையிலிருந்து அறிவிப்பிற்கு!
இயல்பாகவே எனக்கு கலையீடுபாடு அதிகம். எனது ஊரிலே நாடகங்கள் இசை நிகழ்ச்சி என்று விசேட நாட்களில் நிறைய நிகழ்வுகள் நடக்கும். இவற்றை பார்த்து அவற்றில் ஏற்பட்ட ஈடுபாடும் ஈர்ப்பும் கலை ஆர்வத்திற்கு வித்திட்டன எனலாம். அத்தோடு அந்த நாட்களில் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்பது உண்டு. இதனால் அறிவிப்புத் துறையிலும் நாட்டம் ஏற்பட்டது. கல்லூரி காலங்களில் குறிப்பாக மருத்துவக் கல்லூரியில் மாணவனாக இருக்கும் போது நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் நானே அறிவிப்பாளராக இருந்து வந்தேன். அப்போது தான் இவ்வாறு எனது ஆர்வம் வளர்ந்து வந்தது.
அதன் பிறகு தொழில் ரீதியாக கொழும்பில் வசிக்க நேர்ந்த போது கிடைத்த வாப்பு என்னை சூரியன் அறிவிப்பாளராக மாற்றியது

தொகுத்தளிக்கும் நிகழ்ச்சிகள்!
வைத்தியத் தொழிலில் இருப்பதால் பகுதி நேரமாகத்தான் இதில் பணி புரிய முடிகிறது. காலையில் அருணோதயம் நிகழ்ச்சி, இரவில் விடிய விடிய சூரியன் நிகழ்ச்சியும் செவேன். காலையில் பிறந்த நாள் வாழ்த்துக்கூறி அவர்களின் மகிழ்வில் நாங்களும் கலந்து மகிழ்வது ஒரு சிறப்பான வானலை அனுபவம்.
விடிய விடிய சூரியன் நிகழ்ச்சியில் நேரடியாக நேயர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் வாக்கின்றது. பல தரமான பல்வேறு மன நிலையில் உள்ளவர்களோடு உரையாடும் சந்தர்ப்பமும் வாழ்க்கையில் பல பரிணாமங்களையும் பக்கங்களையும் எனக்கு அறிமுகப்படுத்துகின்றது.
அதிகாலையில் இடம் பெறும் ரீங்காரம் நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். பல இரசிகர்களை எனக்கு பெற்றுத்தந்த நிகழ்ச்சி இது என சொல்லலாம். இது நேயர்களின் கவிதைத் தொகுப்பு நிகழ்ச்சியாக அமைகின்றது. எனக்கு கவிதை மீது ஈடுபாடு அதிகம். என் காதலிக்கு எழுதிய கவிதையில் என் முதல் கவிதை ரீங்காரம் நிகழ்ச்சியில் ஆரம்பித்தேன். இதற்கு பின்பு பல கவிதைகளை எழுதி இருக்கின்றேன். இத்தகையதொரு பின்புலம் பாடலுக்கு ஏற்ற கவிதையை கூறி நிகழ்ச்சிகளை தொகுப்பதில் எனக்கு உதவுகின்றது. இந் நிகழ்ச்சி வளர்ந்து வரும் கவிஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக அமைந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் வானொலி அனுபவம்!
எனது முதல் அறிமுக நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு விடிய விடிய சூரியன் நிகழ்ச்சியில் ஆரம்பித்தது. சக அறிவிப்பாளர் றிம்சாத்துடன் இணைந்து செத அந்த நிகழ்ச்சி மறக்க முடியாததோர் அனுபவம். முதல் நிகழ்ச்சியென சற்று பதற்றமாகவும் வான் அலையின் என் குரல் ஒலிக்கிறதென்ற பரவசமாகவும் இருந்தது .

இந்த துறையில் கைகொடுத்தவர்கள்!
திருமதி கமலோஜினி பரமசிவம் அவர்கள் என்னை சூரிய குடும்பத்தில் இணைவதற்கான அறிமுகத்தை ஏற்படுத்தி தந்தார்.
அவரையும் எனக்கு பயிற்சியும் ஆலோசனையும் வழங்கி நெறிப்படுத்திய மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் சூரியன் தலைமைப் பொறுப்பதிகாரி நவநீதன் ஆகியோர் இத்துறையில் எனக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள். அத்துடன் சிறுவயதிலிருந்து கலைத்துறையில் என்னை வழிப்படுத்திய எனது சித்தப்பா கவிஞர் வேலணையூர் தாஸ் அவர்களையும் என்னை வளர்த்து கல்விதந்து ஆளாக்கிய பெற்றோர்களையும் இவ்விடத்தில் நான் குறிப்பிடவேண்டும்.

அறிவிப்புத் துறையில் முன்மாதிரி?
யாரையும் பின்பற்றாமல் எனக்கென ஒரு பாணியை ஏற்படுத்த முயற்சிக்கிறேன் ஆனால் மூத்த அறிப்பாளர்கள் நடராஜசிவம், பீ. எச். அப்துல்ஹமீத், மதியழகன் ஆகியோரின் அறிவிப்பு மிகவும் பிடிக்கும். அவர்களது வழிகாட்டல் மற்றும் அனுபவம் சக அறிப்பாளருடைய ஆதரவு என்பவற்றால் வளர விரும்புகிறேன் .

குடும்பம்?
யாழ்ப்பாணத்தில் பிரபல வைத்தியர் க.நவரத்தினம் எனது தந்தையார் அம்மா கமலேஸ்வரி. எனக்கு நான்கு சகோதரர்கள்.
மனைவி சுஜீபா இவரும் மருத்துவ பணியில் இருக்கிறார். ஆராதனா, அக்சயா என இரண்டு மகள்மார். எனது மனைவி ரீங்காரம் நிகழ்ச்சி விரும்பி கேட்பார். எனது கலைப்பயணத்தில் இவர்களும் துணையாக இருக்கிறார்கள்.

உங்கள் சக அறிப்பாளர்கள் !
அன்பான ஒரு கலைக்குடும்பம் ஒவ்வொருவரும் வேறுபட்ட தனித்திறமை வாந்தவர்கள். பல்வேறு ஆளுமைகளின் கூட்டணி. சூரிய குடும்பம் எல்லோருடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆவல். நேரம் தடையாக இருக்கும். இருப்பினும், எதிர்பார்ப்புகளும் காத்திருப்புகளும் நிறைவேறலாம் என்ற நம்பிக்கையுண்டு.

இரண்டு துறைகளில் இனிமை அனுபவம்!
மருத்துவத்துறையில் இருந்து கொண்டே அறிவிப்பாளராகவும் பணியாற்றுகின்றேன். இரண்டும் வேறுபட்ட தொழிற் சூழலாக இருப்பினும் இரண்டும் மக்களோடு தொடர்பானது. மேலும் வானொலி கூடுதலாக இசையோடு சம்பந்தப்பட்டது.
இசை கூட சில வேளைகளில் மருத்துவமாகிறது. மனதினால் ஏற்படும் உளவியல் சார்ந்த நோகளுக்கு இசை தீர்வாகிறது என ஆராசிகள் சொல்கின்றது இந்தவகையில் எனது தொழிலோடு மிக நெருக்கமாக உணர்கிறேன்.

வானொலி ஊடகத்துறை இன்று எந்நிலையில் உள்ளது. ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
தொழில் நுட்பம் வளராத காலங்களில் வானொலியே மக்களின் பிரதான ஊடகமாக இருந்தது இன்று இலத்திரனியல் ஊடகங்களின் வரவு வானொலியின் செல்வாக்கை சிறிது குறைத்துள்ளது .
ஆயினும் இன்றும் வானொலிக்கென்று தனியான ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பாக சூரியன் சாதாரண மக்களின் தோழனாக இருக்கிறான் .நன்றி snilavan.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *