தூத்துக்குடி: உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை திருச்செந்தூரில் அமைக்கப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலின் மூலவர் சிலையை மாதிரியாகக் கொண்டு நாகர்கோவிலை சேர்ந்த சிற்பிகள் இந்த புதிய சிலையை வடிவமைத்து தந்துள்ளனர்.
ஆனால் அதை கற்சிலையாக அமைப்பதா அல்லது கான்கிரீட்டால் அமைப்பதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த சிலை அமைப்பதற்கான செலவை சிருங்கேரி மடம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
சிலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு முடிவு செய்ததற்கு பிறகு செலவை முழுமையாக சிருங்கேரி மடம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது மற்றவர்களோடு சேர்ந்து நிதியுதவி செய்யுமா என்பது தெரியும் என்றார்.
ஏற்கனவே, மலேசியாவில் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.