சமூகமேம்பாட்டில் கவிதை நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காலத்திற்கு காலம்; தோற்றம் பெற்ற கவிஞர்கள் பலர் தமது கவிகளினூடாக சமூகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அத்தகைய சிறப்புமிகு கவிதை நூல்களின் வரிசையில் அண்மையில் வெளிவந்திருக்கும் நாம் கவிதை இதழும் சமூகத்தின் எழுச்சிக்கு வித்திடும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
சர்ச்சைக்குரியதாக பலராலும் விமர்சிக்கப்படும் பேஸ்புக் எனும் சமூக வலைத்தளத்தை சமூகமேம்பாட்டிற்காகப் பயன்படுத்தும் சிந்தனையின் வடிவாக உருவெடுத்த யாழ் இலக்கியக்குவியத்தின் இரண்டாவது இதழாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த நாம் கவி இதழானது பேஸ்புக் மூலம் இலக்கியவாதிகளையும் பல புதிய படைப்பாளிகளையும்,ஒருங்கிணைத்து அவர்களுடைய படைப்புகளை பதிவுகளாக எமது சமூகத்துக்கு தந்த இதழ் எனும் சிறப்பைப் பெறுகிறது.
அழகான நீலநிற வர்ண அட்டையுடன் பார்ப்பவர் மனங்கொள்ளச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்கவி இதழில் நாம் என இதழின் பெயருடன் ஓர் வினாக்குறியும் சேர்த்து அமைக்கப்பட்டமை இந்த சமூகத்தில் நாம் யார் என்பதை வாசகர்களுக்கு எடுத்து உரைப்பதாக அமைந்துள்ளது. மறைந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் குருவி மனம் எனும் கவிதை இதழின் பின்புற அட்டையை அலங்கரிக்கிறது. முதல் பக்கத்தில் தமது இரண்டாவது இதழ்வரவின் தாமதத்திற்கான காரணத்தை எம்மோடு மனம் திறந்து பேசிய நூலாசிரியர் வேலணையூர்தாஸ் அவர்கள் கவிதைகளால் பேசுவோம் என இதழின் உள்ளே எம்மைப் அழைத்துச் செல்கிறார். உள்ளே படைப்புகள் சமூகப்பிரக்ஞை உடையதாய் இருக்கவேண்டும் என்ற தலைப்பில் வினோத் எழுதியிருந்த கருத்துக்கள் படைப்பாளிகள் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய கருத்துகளாக அமைந்திருந்தது. அடுத்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த உள்ளடக்கம் நூலின் கனதியை எமக்கு உணர்த்தியது. பல்வகைப்பூக்களைக் கொய்து தொடுக்கப்பட்ட ஓர் பூமாலையை போல் சுமார் முப்பத்திமூன்று இளம்படைப்பாளிகளினது கவிகளைத் தாங்கி இவ்விதழ் அமைந்திருந்தது. நமது மண்ணின் படைப்பாளிகள் மட்டுமன்றி இந்திய மண்ணின் மூத்த கவிஞர்களாகிய அய்யப்ப மாதவன் இஅமிர்தம் சூர்யா இபோன்றவர்களுடைய கவிவரிகள் இதழை அலங்கரித்திருப்பது இவ்விதழுக்கேயுரிய தனித்துவமாக அமைந்திருப்பதோடு நிந்தவூர் ஷிப்லி ஜோகி உஸ்மான் மன்னூரான் முதலான முஸ்லிம் கவிஞர்களின் கவிவரிகள் இவ்விதழுக்கு மேலும் சுவைசேர்த்திருக்கின்றன. மனிதமனங்களுக்குள் அரும்பும் காதல் இவாழ்வின் அவலங்கள் பயணச்சித்திரவதைகள் பெண்மையின் வலிகள் என சமூக அவலங்களை எமக்கு உணர்த்தியிருக்கும் இக்கவி இதழைப் படித்துச் சுவைத்தபோது அறுசுவை உண்டியோடு விருந்துண்ட ஒருவனுக்கு கிடைத்த திருப்த்தியும் களிப்பும் எனக்கிருந்தது. என்னை மிகக் கவர்ந்த இக்கவி இதழானது சமூகத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து சமூக எழுச்சியை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
தீரன்
mika alakaana varnanai rasithen vinoth anna
Thanks Aathi….