நியூஜெர்சி : நியூஜெர்சி தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழ் இசைத் திருவிழா மே 05ம் தேதி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. நியூஜெர்சியின் ஜெ.பி.ஸ்டீவன்ஸ் ஹைஸ்கூல் அரங்கில் மாலை 4 மணியளவில் விழா துவங்கியது. நிதி திரட்டும் பொருட்டு அமெரிக்க தமிழ் மருத்துவ கழகத்துடன் இணைந்து நியூஜெர்சி தமிழ் தமிழ்ச் சங்கம் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவில் பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் இசைக் கச்சேரி இடம்பெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற நித்யஸ்ரீயின் இசைக் கச்சேரி, பார்வையாளர்களை இசை வெள்ளத்தில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நியூயஜர்சி தமிழ் பாடகர்களின் இன்னிசை நிகழ்ச்சியும், ஜெர்சி ரிதம்ஸ் குழுவினரின் தமி்ழ் திரைப்பட பாடல்களும் அரங்கத்தில் கைதட்டல்களை அள்ளிக் குவித்தது. நியூஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நித்யஸ்ரீ மகாதேவனுக்கு பொன்னாடை போர்த்தியும், பரிசுகள் வழங்கியும் கவுரவிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ் இசைத்திருவிழாவில் கலந்து கொண்டு இன்னிசை அமுதம் பருகிய ரசிகர்கள் அனைவருக்கும் சுவையான இரவு உணவு வழங்கப்பட்டு, நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
