லண்டன் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயசுடன் இணைந்து விளையாட மகேஷ்பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் இம்முறை லண்டனில் நடைபெறுகிறது.
இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர்களின் மோதலால் ஒலிம்பிக் போட்டிக்கு இரு அணிகளை அனுப்ப இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்தது.
இதன்படி இரட்டையர் பிரிவில் மகேஷ்பூபதியும், ரோகன் போபண்ணாவும் இணைந்து விளையாடுவார்கள் என்றும், லியாண்டர் பயசிற்கு இளம்வீரரான விஷ்ணுவர்தன் ஜோடியாக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.
தரவரிசை பட்டியலில் 207வது இடத்தில் உள்ள விஷ்ணுவர்தனுடன் களமிறங்க லியாண்டர் பயஸ் தயக்கம் காட்டி வருகிறார்.
மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா தன்னுடன்தான் களமிறங்க வேண்டுமென உறுதிமொழி எழுதி கொடுக்க வேண்டுமெனவும் டென்னிஸ் சங்கத்திற்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது.
இதே கருத்தை வலியுறுத்தி பயசின் தந்தை வேஸ் பயசும் பேட்டி அளித்தார். மேலும் பயசை சமாதானப்படுத்தும் முயற்சியில் இந்திய டென்னிஸ் சங்கம் இன்று களமிறங்கியது.
இதற்கிடையே சர்வதேச டென்னிஸ் சங்கம் ஒலிம்பிக் போட்டியில் சானியா நேரடியாக தகுதி பெறும் வகையில் நேற்று வைல்டுகார்டு (சிறப்பு அனுமதி) வழங்கியது.
இந்நிலையில் சானியா அளித்த பேட்டியில், இந்தியாவுக்காக 2வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு மீண்டும் வாய்ப்பளித்த சர்வதேச டென்னிஸ் சங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய டென்னிஸ் சங்கம் ஒலிம்பிக் போட்டிக்கான அணியை அறிவித்ததில் இருந்தே என்னிடம் பயசுடன் இணைந்து விளையாடுவீர்களா? என பலமுறை கேள்வி கேட்டுவிட்டனர். நான் நாட்டிற்காக தான் ஆடுகிறேன்.
பயசுடன் மட்டுமல்ல பூபதி, விஷ்ணுவர்தன், சோம்தேவ் வர்மன் என்று யாருடன் வேண்டுமானாலும் இணைந்து விளையாட தயாராக இருக்கிறேன்.
எந்த பிரச்னையும் இல்லை. 21ம் நூற்றாண்டில் நாம் இருக்கிறோம். வீரர்கள் பங்கேற்பு பிரச்னையில் என்னை தூண்டிலாக பயன்படுத்தியது வேதனை அளிக்கிறது.
பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற எனக்கு இந்திய டென்னிஸ் சங்கம் எனக்கு ஒரு வாழ்த்துகூட தெரிவிக்கவில்லை. விஷ்ணுவர்தனுடன் களமிறங்க பயஸ் ஆட்சேபம் தெரிவித்திருப்பது முறையானதல்ல. அவரும் திறமையான வீரர்தான்.
மகேஷ்பூபதியுடன் ரோகன் போபண்ணா களமிறங்குவது நல்ல விடயம்தான் என்றும் கலப்பு இரட்டையரில் மகேஷ்பூபதி தியாகம் செய்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.