புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டானிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
உங்களின் பயிற்சியில் நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் பங்கெடுத்துக் கொள்கிறீர்கள். அது ஏன்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், எனக்கு முழு நிறைவு(பெர்பெக்ஷன்) முக்கியம். நான் பயிற்சியில் எவ்வாறு செயல்படுகிறேனோ, அதேபோல்தான் போட்டியிலும் செயல்பட முடியும். போட்டியில் சிறப்பாக செயல்பட, சிறப்பான பயிற்சி அவசியம் என்று அவர் கூறினார்.
அதுபோலத்தான் நாம் எழுதப்போகும் தேர்வும். பள்ளிகளில் முக்கிய தேர்வுகளுக்கு முன்னதாக திருப்புதல் தேர்வுகள்(ரிவிசன் டெஸ்ட்) நடத்தப்படுகின்றன.
திருப்புதல் தேர்வுகளை அலட்சியமாக எழுதுவது, மாணவர்களின் பொதுவான வழக்கமாக இருக்கிறது. திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் முக்கியமற்றவைதான். ஆனால் அத்தேர்வு உங்களை முக்கிய தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான ஒரு நுழைவாயில். மாணவர்கள், திருப்புதல் தேர்வுகளை, முக்கிய தேர்வு எழுதுவது போன்றே நினைத்து அக்கறையுடன் எழுத வேண்டும். இவற்றில், 2 முக்கிய அம்சங்கள் உள்ளன.
முதல் அம்சம்: ஒருவர் தனது உண்மையான தேர்வு செயல்பாட்டு திறனை, திருப்புதல் தேர்வுகளின் மூலம் முன்கூட்டியே மதிப்பிட முடியும். இதன்மூலம் குறைகளை அறிந்துகொண்டு அதை முக்கிய தேர்வில் சரிசெய்ய முடியும்.
இரண்டாவது அம்சம்: நீங்கள் திருப்புதல் தேர்வை நல்ல முறையிலும், அக்கறையுடனும் எழுதினால், அதே மனநிலை முக்கிய தேர்விலும் ஏற்படும். அனைத்தையும் அதில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டால் கடைசியில் எதுவுமே செய்ய முடியாமல் போய்விடும். ஒரு விழாவில் நாட்டியமோ/நாடகமோ/கருத்தரங்கமோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அதில் பங்கேற்பவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு ஒத்திகை பார்ப்பார்கள். ஒத்திகையில் திருப்தி ஏற்பட்டால், விழாவிலும் சிறப்பாக அமையும் என்று அர்த்தம். அதுபோலத்தான் இதுவும்.
எனவே பயிற்சி என்பதை எப்போதும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது. ஈடுபாடான பயிற்சியே வெற்றிக்கு உதவும். ஒரு சிறந்த மாணவர் எப்போதுமே திருப்புதல் தேர்வுகளை சிறப்பாக எழுதுவார். பயிற்சி நம்மை சிறந்தவராய் மாற்றுவதால், அந்த பயிற்சியும் சிறப்பாக இருக்க வேண்டியது முக்கியம்.
மட்டக்களப்பிலிருந்து
சதிஸ்குமார் கிருஜா