பல்லெகெலே : இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 226 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வென்ற இலங்கை 1,0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் வெற்றி தீர்மானிக்க கூடிய 3வது மற்றும் கடைசி டெஸ்ட் பல்லெகெலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை பீல்டிங் தேர்வு செய்தது. பந்துவீச்சுக்கு சாதகமாக இம்மைதானத்தில் இலங்கை பந்துவீச்சாளர் சிறப்பாக பந்துவீசினர். பெரேரா வேகத்தில் ஹபீஸ் (22), அசர் அலி (0), தாபிக் உமர் (29), மிஸ்பா உல் ஹக் (40) வெளியேற பாகிஸ்தான் தடுமாறியது. அனுபவ வீரரான யூனிஸ் கான் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 141 ரன்களுக்கு 5 விக்கெட் என தத்தளித்துக் கொண்டிருந்த அணியை ஆசாத் ஷபிக் சற்று கரையேற்றினார். இவர் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடிக்க பாகிஸ்தான் 200 ரன்களை கடந்தது. ஷபிக் 75 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் பாகிஸ்தான் 226 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கையும் திணறியது. சண்டிமால் (8), சங்கக்கரா (0), ஜெயவர்த்தனே (12) வந்த வேகத்தில் வெளியேறினர். ஆட்ட நேர முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்களுடன் இருந்தது. பரணவிதனா 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.