மன்னார், பேசாலை 50 வீட்டுத்திட்ட வெற்றிமாங் குடியிருப்பு மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் எ.சுனேஸ் சூசை தெரிவித்தார்.

பேசாலை கிராமத்தின் வட கரையோரப்பகுதியில் அமைந்துள்ள வெற்றிமாங் குடியிருப்பு எனும் கிராமத்தில் 50 வீடுகள் அமைக்கப்பட்டு கடந்த 2006 ஏப்ரல் 16ஆம் திகதி மன்னார் ஆயரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த கிராமத்தில் 50 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.

கடந்த யுத்த காலத்தின் போது அப்பகுதியில் இடம்பெற்ற அனார்த்தத்தின் போது அப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் பேசாலையில் உள்ள உறவினர்களுடைய வீடுகளிலும் ஏனையோர் அகதிகளாக இந்தியாவிற்கும் இடம்பெயர்ந்து சென்றனர்.

இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்த நிலையில் அந்த மக்கள் தமது கிராமத்தில் குடியமர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மீள்குடியேறிய சுமார் 15 குடும்பங்கள் கடற்படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயரதிகாரிகளும் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அக்கிராம மக்களை மீள்குடியமர கடற்படையினர் அனுமதி வழங்கினர். இந்த நிலையில் 50 குடும்பங்களில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் நேற்று வெள்ளிக்கிழமை மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். ஏனைய 13 குடும்பங்களும் இடம்பெயர்ந்த நிலையில் வேறு மாவட்டங்களிலும் இந்தியாவிலும் வாழ்ந்து வருகின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த மீள்குடியேற்ற நிகழ்வின் போது மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரன்லி டிமேல், மன்னார் பிரதேசசபை தவிசாளார் எஸ்.மாட்டின் டயஸ், மன்னார் பிரதேசசபை உறுப்பினர் ஏ.யூட் கொன்சால் குலாஸ், மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் ஏ.சுனேஸ், பேசாலை காவற்துறை அதிகாரி, கடற்படை அதிகாரி, பேசாலை வெற்றிநாயகி ஆலயப்பங்குசபை செயலாளர் என்.ஜெயந்தன் துரம், சட்டத்தரணி பிறிமுஸ் சிறாய்வா, கிராம உத்தியோகத்தர் ச.கியூபட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *