கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜூலை மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ஏற்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித் துள்ளது.தேர்தல் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 8 ஆம் திகதி அல்லது 15 ஆம் திகதியில் நடத்தப்பட உள்ளதோடு அது குறித்து எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்பட உள்ளது.

இதேவேளை அரசியல் யாப்புக்கு அமைவாகவே 3 மாகாண சபைகளும் முன்கூட்டி கலைக் கப்பட்டன. எமக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பு எப்பொழுது உள்ளதோ அதற்கேற்பவே தேர்தல் நடத்துவோம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

தோல்வி அடைவ தற்காக யாரும் தேர் தலில் போட்டியிடு வதில்லை என்று கூறிய அவர் விரைவில் வடமாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

3 மாகாண சபைகள் கலைக்கப்பட்டது குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் வினவியதற்கு கருத்துத் தெரிவித்த அவர்;அரசியல் ரீதியிலே தேர்தலை எப்பொழுது நடத்துவது என தீர்மானிக்கப்படும். மாகாண சபைகளை ஒரு வருடம் பூர்த்தியடைந்த பின் கலைக்க அரசியல் யாப்பில் அனுமதி உள்ளது. அதனடிப்படையிலேயே தேர்தலை முன்கூட்டி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அரசியல் யாப்புக்கு முரணாக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறித்த தினத்தில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என யாராவது கூறினால் அதனை ஏற்க முடியாது. வெற்றிபெறக் கூடிய சந்தர்ப்பத்திலே நாம் தேர்தலை நடத்துவோம்.

வடக்கு தேர்தல்

வடமாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் பயப்படவில்லை. மிதிவெடி அகற்றல் மீள்குடியேற்றம், வாக்காளர் இடாப்பு தயாரிப்பு என்பன நிறைவு செய்தவுடன் தேர்தலை நடத்தலாம். இந்தப் பணிகள் 95 வீதம் வரை நிறைவடைந்துள்ளன. தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற பின்னணி ஏற்படுத்தப்படவேண்டும்.

வடக்கு தேர்தலில் த.தே. கூட்டமைப்பு வெற்றிபெறுவது தொடர்பில் எமக்கு எதுவித பிரச்சினையும் கிடையாது. அந்தக் கட்சிக்கு பெரிய வாக்குவங்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *