கொழும்பு:இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் முகமது ஹபீஸ் சதம் அடித்து அசத்த, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில், ஒரு விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்து, வலுவான நிலையில் உள்ளது.
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. “டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்தனா, “பீல்டிங்’ தேர்வுசெய்தார்.
ஹபீஸ் சதம்:
முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹபீஸ், தவுபிக் உமர் ஆகியோர் இணைந்து “சூப்பர்’ துவக்கம் அளித்தனர். சற்று வேகமாக ரன்கள் சேர்த்த தவுபிக் உமர், அரைசதம் அடித்து (65 ரன்கள், 74 பந்து) வெளியேறினார். பின் வந்த அசார் அலி, ஹபீசுக்கு நல்ல “கம்பெனி’ கொடுத்தார்.
இலங்கை அணியின் பவுலர்களை எளிதாக சமாளித்தனர். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஹபீஸ், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 5வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசார் அலி, தனது 14வது அரைசதம் கடந்தார். இந்த ஜோடியை பிரிக்க ஜெயவர்தனா எடுத்த எந்த முயற்சியும், கடைசிவரை பலன் தரவில்லை.
முதல்நாள் ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 256 ரன்கள் சேர்த்து, ஹபீஸ் (172), அசார் அலி (92) அவுட்டாகாமல் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *