மெக்சிகோ சிட்டி:மெக்சிகோ அதிபர் தேர்தலில் என்ரிக் பெனா நீட்டோ வெற்றி பெற்றுள்ளார்.மெக்சிகோ அதிபர் பெலிபி கால்ட்ரனின் பதவி காலம் முடிவடைந்ததால், நேற்றுமுன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. பி.ஆர்.ஐ., கட்சி சார்பில் மெக்சிகோ மாகாண முன்னாள் கவர்னர் என்ரிக் பெனா நீட்டோ, 45, போட்டியிட்டார். பி.ஆர்.டி., கட்சி சார்பில் மெக்சிகோ நகர முன்னாள் மேயர் ஆன்ட்ரஸ் மானுவலும், ஆளும் தேசிய செயல் கட்சி சார்பில், வர்த்தகரான ஜோஸ்பினா போட்டியிட்டனர்.
மெக்சிகோவில் ஆறு மாகாண கவர்னர் தேர்தலும் நேற்றுமுன்தினம் நடந்தது. அதிபர் தேர்தலில் நீட்டோவுக்கு 38 சதவீத ஓட்டுகளும், பி.ஆர்.டி., கட்சி சார்பில் போட்டியிட்ட ஆன்ட்ரஸ் மானுவலுக்கு 31 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. இதையடுத்து நீட்டோ, புதிய அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். மெக்சிகோ சிட்டியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த நீட்டோவுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.மெக்சிகோவில் போதை கடத்தும் கும்பலின் அட்டகாசம் அதிகம் உள்ளது.
இதை கட்டுபடுத்துவேன், என தற்போதைய அதிபர், கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் பதவி ஏற்றதிலிருந்து இதுவரை 55 ஆயிரம் பேர் போதை கடத்தல் சண்டை தொடர்பாக கொல்லப்பட்டுள்ளனர்.ஆனால், இந்த போதை கடத்தல் கும்பலை ஒழிப்பேன், என நீட்டோ வாக்குறுதி அளித்துள்ளார்.தற்போதைய சூழலில் அனைவரும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும். பிரித்தாளும் அரசியல் நமக்கு வேண்டாம், என நீட்டோ தனது உரையில் குறிப்பிட்டார்.