மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கம் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் நேற்று புதன்கிழமை சுகவீனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடுபூராகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் மேற்கொண்ட சுகவீன விடுப்புப் போராட்டத்தில் தாமும் இணைந்துகொண்டதாக யாழ்.பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் கனகேஸ்வரன் சதீஸ் தெரிவித்தார்.
போக்குவரத்து கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு அதிகரிக்கப்படவேண்டும் என்ற மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று முதல் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தத்தமது வேலை செயற்பாட்டு அறிக்கையினை சுகாதார அமைச்சிற்கு அறிக்கை இடுவதில்லை என்றும் சுகாதார திணைக்களத்தினால் நடாத்தப்படும் கூட்டங்களுக்கு சமூகம் அளிப்பதில்லை என்றும் பதில் பிரதேச கடமைகளை மேற்கொள்வதில்லை என்றும் தீர்மானித்துள்ளதாக யாழ்.பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் கனகேஸ்வரன் சதீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.