புதுடெல்லி : முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும், உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்று அசத்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு அர்ஜுனா விருதும் வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
விருதுகளுக்கான பெயர்களை பரிந்துரை செய்வதற்கான கால கெடுவை, மத்திய அரசு ஜூலை 20ம் தேதி வரை சமீபத்தில் நீட்டித்தது. இதையடுத்து டிராவிட் மற்றும் யுவராஜ் இருவருக்கும் விருது வழங்க சிபாரிசு செய்து அடுத்த வாரம் முறைப்படி கடிதம் அனுப்பப்பட உள்ளதாக, கிரிக்கெட் வாரிய நிர்வாகி ரத்னாகர் ஷெட்டி நேற்று தெரிவித்துள்ளார்.
டிராவிட்டுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டால், சச்சின் டெண்டுல்கர் (1997,98), டோனி (2007,08) ஆகியோரை தொடர்ந்து கேல் ரத்னா விருது பெறும் 3வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.
அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள யுவராஜ் சிங், இலங்கையில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 போட்டிக்காகத் தயாராகி வருவதாகவும், இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதே தனது கனவு என்றும் கூறியுள்ளார்.