முதலாம் உலகப் போர்க் காலத்தில் தனக்கு கட்டளையிடும் அதிகாரியாக இருந்த யூத இனத்தவர் ஒருவரின் உயிரை இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜெர்மனிய ஆட்சித் தலைவரான ஹிட்லர் காப்பாற்றியிருக்கிறார் என்று காட்டும் கடிதம் ஒன்று ஜெர்மனியில் கிடைத்திருக்கிறது.ஆய்வொன்றில் ஈடுபட்டிருந்த டாக்டர் சூசென் மோஸ் என்பவருக்கு எதேச்சையாக இந்தக்கடிதம் கிடைத்திருப்பதாக ஜெர்மனியில் வெளியாகும் ஜூயிஷ் வாய்ஸ் என்ற பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யூத இனத்தவர் ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஹிட்லர் தலையிட்டிருக்கிறார் என்பதைக் காட்டுகின்ற அபூர்வமான கடிதமாக இது பார்க்கப்படுகிறது.
‘ஏர்னஸ்ட் ஹெஸ் என்பவருக்கு மரண தண்டனை அளிக்கக்கூடாது என்பதுதான் நாஜிக்களின் தலைவரான ஃபியூரரின் ஆணை’,அதாவது ஜெர்மனிய ஆட்சித் தலைவராக இருக்கும் ஹிட்லிரின் விருப்பம் என்று 1940-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்டிருக்கின்ற அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிட்லிரின் எஸ்எஸ் படையின் தளபதியான ஹீன்ரீச் ஹிம்லர் தான் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார்.
முன்னாள் நீதிபதியான ஏர்ன்ஸ் ஹெஸ் ஒரு யூத இனத்தவர் என்பதால் தொழிலை இழந்துள்ளார்.அவரை நாஜிப்படையினர் அடித்து துன்புறுத்தியபோது, ஹிட்லருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
யூதர்களுக்கு எதிரான ஹோலோகோஸ்ட் படுகொலைகள் பெரும் எடுப்பில் நடந்துகொண்டிருந்தபோது, ஏர்னஸ்ட் ஹெஸ்ஸின் உயிருக்கு ஆபத்துவந்துவிடாமல் பாதுகாப்பதற்காக ஹிட்லர் தலையிட்டார் என்பதை இந்தக் கடிதம் வெளிப்படுத்துகிறது.
முதலாம் உலகப் போர்க் காலத்தில் ஹிட்லரின் கட்டளை அதிகாரியாக ஏர்னஸ்ட் ஹெஸ் சிறிது காலம் இருந்திருக்கிறார்.
அதன் பின்னர் இரண்டாம் உலகப் போரின் போதுதான் ஹிட்லரின் நாஜிப்படைகளால் கொல்லப்படுவதிலிருந்து அவர் ஹிட்லரின் தலையீட்டின் மூலம் தப்பியிருக்கிறார்.
அதன்பின்னர் அவர் அடிமைத் தொழிலாளியாக நடத்தப்பட்டிருக்கிறார்.
ஆனால், அவரது சகோதரி போலந்தில் நாஜிக்கள் நடத்திய அவுஸ்விச் வதைமுகாமில் கொல்லப்பட்டார்.
இரண்டாம் உலகப் போர் முடிந்தபின்னர், அதாவது ஹிட்லர் கொல்லப்பட்ட பின்னர், ஹெஸ் மேற்கு ஜெர்மனியின் ரயில்வே அதிகாரசபைத் தலைவராக பணிபுரிந்தார்.
அவரது மகள் இப்போது உயிரோடு இருக்கிறார்.
முதலாம் உலகப்போர்க் காலத்தில், அதாவது ஹிட்லர் இளம் கோப்ரல் தர இராணுவ சிப்பாயாக இருந்தபோது, நண்பர்களின் சகவாசம் எதுவுமின்றி தனிமையில் தான் இருப்பார் என்று தந்தை ஹெஸ் கூறுவதை அவரது மகள் ஜூயிஷ் வாய்ஸ் பத்திரிகையிடம் ஞாபகப்படுத்தினார்.
