லண்டன் : லண்டன் ஹைகேட் ஹில் ஸ்ரீ முருகன் கோயிலில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தின் ஆண்டு மகோற்சவ விழா ஜூன் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஜூலை 03ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மாலை திருவிழா, மாம்பழத் திருவிழா, வேட்டைத் திருவிழா, சப்பரத் திருவிழா, தேர்த் திருவிழா, தீர்த்த உற்சவம், பூங்காவன திருவிழா, வைரவர் மடை உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெற்றது. நாள்தோறும் மாலையில் பல வித வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மகோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா ஜூலை முதல் தேதியன்று நடைபெற்றது. சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேர், நாதஸ்வர மேளம் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் லண்டன் மாநகர வீதிகளில் உலா வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. திருதேர் வலம் வந்த பாதைகளில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், அங்கப்பிரதிட்சணம் செய்தும், தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் மட்டுமின்றி லண்டன் நகர மக்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
