மழையை முந்திய மண்வாசம்
மயிர்கூச்செறியும் கிணத்துத் தண்ணீர்
சலங்கைச் சத்த மாட்டு வண்டில்
மதிலுரசி சூடு வைக்கும் முள்முருக்கங்காய்
நிறம்பிரித்துக் கோலம் போடும் நாயுண்ணிப்பூக்கள்
கல்குத்தி பருப்பெடுத்துண்ணும் மத்தாப்புக் காய்
மண்மீது படம் வரையவிடும் இலங்கைப் பூச்சி
சாமிக்குத் தேர் செய்யும் குரும்பட்டிகள்
மணிக்கூட்டு முள்ளாகும் பட்டிப்பூ மகரந்தங்கள்
பல சண்டைகள் பார்த்த கிடுகு வேலிகள்
சுகமான தூக்கம் தரும் குருத்தோலைப்பாய்
உடன்கறி வாங்கச்செல்லும் கடற்கரை
முட்களுக்கு அஞ்சாத கள்ளிப்பழங்கள்
கண்டல்களோடு பரந்த இராவணன் மீசைகள்
கூழாங்கற்களில் கொக்கான் விளையாட்டு
சடங்கென்றால் கூடி விடும் ஊர் மக்கள்
மனதைத் தைக்கும் நினைவுகள் மீள
வேண்டும் நான் இழந்த – என்
தாய் நிலமல்ல……
கடந்து போன என் சிறுமிப் பருவம் ……..
– அம்மு குட்டி –