வன்னிப் பகுதி ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பாக வட மாகாண கல்விப் பணிப்பாளருடனும் கல்வி அமைச்சின் செயலாளருடனும் எதிர்வரும் 17ஆம் திகதி ல் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தமது சேவை காலத்தினை நிறைவு செய்துள்ள 104 ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு தகுதியானவர்கள் என மாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
மேற்படி 104 ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் கொழும்பில் கடந்த 28 ஆம் திகதி சந்திப்பொன்று மேற்கொள்ளப்பட்டிருந்த வேளை பட்டதாரிகளின் நியமனத்தினால் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவில்லை.
அதனடிப்படையில் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் வடமாகாண கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சின் செயலாளர் இடையே இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் மேலும் தெரிவித்தார்.