லண்டன்: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தாவிட்டால் கடல் மட்டம் 2100-ம் ஆண்டில் ஒரு அடி அதிகரிக்கும். 2300-ம் ஆண்டில் சுமார் 5 அடி அதிகரிக்கும் என்று பீதி கிளப்புகின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். புவி வெப்பம் உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பருவநிலை மாறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையம் ஒரு ஆய்வு நடத்தியது. ஆராய்ச்சி மற்றும் இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது: இயற்கை மற்றும் மனித இடர்பாடுகளால் பருவநிலையில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பருவநிலை மாறுபாடுகள், தொடர்ந்து அதிகரித்து வரும் புவி வெப்பம், இதனால் பனிப்பாறை மற்றும் பனிப்படலங்கள் வேகமாக உருகுதல், கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகம் வெளியாவது, ஓசோன் படலத்தில் ஓட்டை உருவாவது போன்றவற்றால் மனித இனம் மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்கள் உள்பட சகல ஜீவராசிகளும் பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவை காரணமாக 1980-ம் ஆண்டில் இருந்ததைவிட புவி வெப்பம் 2010-ல் 0.17 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பனிப்பாறைகள், பனித்தீவுகள் உருகுவதால் 2005-ம் ஆண்டில் இருந்து சராசரியாக ஆண்டுக்கு 2.3 மில்லிமீட்டர் என்ற அளவில் கடல் மட்டம் உயர்வதாகவும் தெரிகிறது. தொடர்ந்து கடல் மட்டம் உயரும் பட்சத்தில் கரீபியன் தீவுகள், மாலத்தீவு, ஆசிய பசிபிக் தீவுக்கூட்டங்கள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் மூழ்கிப் போகும் அபாயம் இருக்கிறது. பூமியில் மட்டுமின்றி ஆழ்கடல் பகுதியிலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்தே காணப்படுகிறது. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வரும் 2020-ம் ஆண்டுக்குள் சுமார் 180 நாடுகளில் பருவநிலைகளில் மிகப்பெரும் மாற்றங்கள் இருக்கும்.

உலக நாடுகள் அனைத்தும் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க 100 சதவீத நடவடிக்கை எடுத்து 2100-ம் ஆண்டில் புவி வெப்பத்தை 0.83 டிகிரியாக குறைத்தாலும்கூட, கடல் மட்டம் 14.2 செ.மீ. (ஏறக்குறைய அரை அடி) அளவுக்கும், 2300-ம் ஆண்டில் 24.2 செ.மீ. அளவுக்கும் உயரும். மாறாக, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏனோதானோவென்று நடவடிக்கை எடுத்தால், 2100-ல் புவி வெப்பநிலை 3.91 டிகிரியாக இருக்கும். இதனால், கடல் மட்டம் 32.3 செ.மீ. (ஒரு அடிக்கு மேல்) உயரும். 2300-ல் கடல் மட்டம் 139.4 செ.மீ. (4.6 அடி) அதிகரிக்கும். பல தொலைவுக்கு ஊருக்குள் கடல் நீர் புகுந்து, பல நகரங்கள், கடலை ஒட்டிய சிறிய நாடுகள், தீவுகள் அழியும்.

யாழிலிந்து
முகிலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *