பெங்களூரு : தமிழகத்தையும், தமிழர்களையும் அவதூறாக, தனது பேஸ்புக்கில் எழுதிய நடிகை தன்யா பாலகிருஷ்ணாவுக்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தமிழகத்திலிருந்து பெங்களூருவுக்கு ஓட்டம் பிடித்தார்.

“ஏழாம் அறிவு’, “காதலில் சொதப்புவது எப்படி’ உட்பட சில படங்களில், சின்ன, சின்ன வேடங்களில் நடித்தவர் நடிகை தன்யா. பெங்களூருவைச் சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசையில், தமிழகத்துக்கு வாய்ப்பு தேடி வந்தார்.சென்னையிலுள்ள தனது தோழிகளுடன் தங்கியிருந்த அவர், சினிமா வாய்ப்பு தேடி, சினிமா கம்பெனிகளில் ஏறி, ஏறி இறங்கினார். “ஏழாம் அறிவு’ படத்தில் சிறிய வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்தார். சமீபத்தில் வெளியான “காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்திலும் சிறிய வேடம் கிடைத்தது. இதையடுத்து, பெரிய நடிகையாகி விட்டோம் என்ற மிதப்பில், பேஸ்புக்கில் தமிழர்களையும், தமிழகத்தையும் தரக்குறைவாக எழுதினார்.சென்னை மக்களை “பிச்சைக்காரர்கள்’ என்ற ரீதியில் அவரது கருத்து அமைந்திருந்தது. “கர்நாடகாவிடம் காவிரி தண்ணீர், மின்சாரம் தருமாறு தமிழகம் பிச்சை கேட்டது’ என விமர்சித்து பேஸ்புக்கில் எழுதியிருந்தார்.

கடும் கண்டனம்:தமிழ் சினிமாக்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கேட்டு முகாமிட்டிருந்த அவரது கருத்துக்களைப் படித்த தமிழகத்தைச் சேர்ந்த பலரும், பேஸ்புக்கில் நடிகை தன்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத தன்யா, பயந்து போய், பேஸ்புக்கில் மன்னிப்பு கோரினார். இனிமேலும் தமிழகத்தில் இருந்தால் பிரச்னை ஏற்படும் என்று பயந்து போய், இரவோடு இரவாக சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூருவுக்கு ஓட்டம் பிடித்தார்.பெங்களூரு வந்த பின், இனிமேல் நான் தமிழ்ப் படத்தில் நடிக்க மாட்டேன். தமிழ் சினிமா உலகை விட்டு விலகுகிறேன். தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கு போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்கிறேன். சென்னைக்கு செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

வீடு முற்றுகை:இதையறிந்த பெங்களூருவைச் சேர்ந்த சில தமிழ் அமைப்புகள், நடிகை தன்யா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கருத்து தெரிவித்துள்ளன. இதை கேள்விப்பட்ட அவர், போலீசிடம் பாதுகாப்பு கேட்க முடிவு செய்துள்ளார்.

தமிழ் அமைப்புகள் கூறுகையில், “”தமிழகம், காவிரி நதி நீரில் தனக்குரிய பங்கைத் தான் கேட்கிறதே தவிர, பிச்சை கேட்கவில்லை. இது தெரியாமல், “காவிரி நீரை தமிழகம் பிச்சை கேட்கிறது’ என்று கூறியிருப்பது தமிழர்களிடையேயும், தமிழ் அமைப்புகளிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் எந்த காலகட்டத்திலும் கர்நாடகாவிடம் மின்சாரம் கேட்டதில்லை. தமிழகத்திலுள்ள நெய்வேலி அனல் மின்சார நிலையத்திலிருந்து கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவுபடி மின்சாரம் வழங்கி வருகிறது
.
உண்மைக்கு மாறானவை:பெங்களூருவில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் போது, கர்நாடக அணி இரண்டாவது இடத்துக்கு வந்த போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முரண்டு பிடித்தனர். அவர்களிடம் எங்களுக்கு விட்டுக் கொடுங்கள் என்று தமிழக அணி கெஞ்சவில்லை. இது போன்று உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறியுள்ளது, அவரது ஆணவத்தைக் காட்டுகிறது.இனிமேல், தமிழ் சினிமா படங்களில் அவருக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என, தமிழ் திரைப்பட உலகமும் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தன்யா, அதை மூடி மறைக்கவே, “தமிழகத்துக்கு செல்ல மாட்டேன், தமிழ்ப் படத்தில் நடிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்,” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *