பாகிஸ்தானுக்கெதிரான தொடரிலிருந்து இலங்கை அணியின் தொடக்க வேகப்பந்து வீச்சாளர் சானக வெலகேத்ரா வெளியேற்றப்பட்டுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்ட போது அவ்வணியில் சேர்க்கப்பட்டிருந்த வெலகேத்ரா, முதலாவது போட்டியின் போது விளையாடவில்லை. அவருக்கு பதிலாக நுவான் குலசேகரா இடம் பெற்றிருந்தார்.
வெலகெதரவிற்கு ஏற்பட்டுள்ள தோள்பட்டை காயம் குணமடைய காலம் எடுக்கும் என்பதால் அவர் இத்தொடரில் பங்கேற்க வாய்ப்புக்கள் இல்லை என்பதால் வெலகேத்ரா இத்தொடர் முழுவதிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை அணியின் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறுகையில், வெலகேத்ராவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு அறுவைசிகிச்சை தேவைப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அணிக்காகச் சிறப்பாகப் பந்துவீசிய வந்த வெலகேத்ரா இத்தொடரில் பங்கேற்க முடியமால் போனது துரதிர்ஷ்டவசமானது எனவும் தெரிவித்தார்.
31 வயதான இடதுகை வேகப்பந்து வீச்சாளரான வெலகேத்ரா, இலங்கை அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.