ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் அணிகளுக்கான ஏலத்திற்கு சிறந்த வரவேற்புக் கிடைத்துள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பிரபலமடைந்த இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளையடுத்து, இலங்கையிலும் இம்முறை ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் போட்டிகள் (எஸ்.எல்.பி.எல்) தொடங்க உள்ளன.
இத்தொடரில் 7 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணிக்கும் சராசரியாக 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏலத்தொகையாக கோரப்பட்டுள்ளது.
எனினும் வெற்றிபெற்ற ஏலத்தொகையாளர்கள் பற்றிய விபரம் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஐ.பி.எல் தொடரோடு ஒப்பிடும் போது மிக மிகக் குறைவானது என்ற போதிலும், ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்கைப் பொறுத்தவரை சிறந்த வரவேற்பாகக் கருதப்படுகிறது.
முதலாவது ஐ.பி.எல் தொடரில் 8 அணிகள் மொத்தமாக 723 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டிருந்தன.
எனினும் சமீபத்தில் வங்கதேசத்தில் நிறைவுபெற்ற பங்களாதேஷ் பிறீமியர் லீக்(பி.பி.எல்) தொடரோடு ஒப்பிடும் போது இது சிறந்ததாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், பங்களாதேஷ் பிறீமியர் லீக்கில் ஒவ்வொரு அணியும் ஏறத்தாழ 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கே விற்கப்பட்டிருந்தன.
அதேநேரம், பங்களாதேஷ் பிறீமியர் லீக், இந்தியன் பிறீமியர் லீக் ஆகியவற்றோடு ஒப்பிடும் போது ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்கில் அணிகள் விற்பனை செய்யப்பட வில்லை. அணிகள் குத்தகைக்கு மட்டுமே விடப்படுகின்றன.
குத்தகைக் காலம் முடிவடைந்த பின்னர் குத்தகைகளை புதுப்பிக்க வேண்டிய தேவையுள்ளது குறிப்பிடத்தக்கது.