முத்தரப்பு டி20 தொடரின் இறுதிச் சுற்றில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய ஜிம்பாப்வே அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் மோதிய முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் மூன்று அணிகளுமே தலா 8 புள்ளிகள் (4 போட்டியில் 2 வெற்றி, 2 தோல்வி) பெற்று சமநிலையில் இருந்ததால், ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்ரிக்கா (+0.378), ஜிம்பாப்வே (0.086) அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
வங்கதேச அணி பரிதாபமாக வெளியேறியது.
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிச் சுற்றில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது.
டு பிளஸ்சிஸ் 66 ஓட்டங்கள் (57 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), அல்பி மார்க்கெல் 34 ஓட்டங்கள் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.1 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 150 ஓட்டங்கள் எடுத்து அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சிபந்தா 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மசகட்சா 58 ஓட்டங்கள் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), அணித்தலைவர் பிரெண்டன் டெய்லர் 59 ஓட்டங்கள் (41 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.
ஜிம்பாப்வே அணித்தலைவர் டெய்லர் ஆட்ட நாயகன் விருதும், மசகட்சா தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.