யாழ். பஸ் நிலையத்தில் நடைபெறவிருந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கிய நீதிமன்ற தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளை சரியானது என யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

கடந்த 18 ஆம் திகதி யாழில் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு வழங்கிய நீதிமன்ற தடை உத்தரவில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது

இந்த வழக்கிற்கான தீர்ப்பை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் மா.கணேசராசா நேற்று வழங்கினார். அந்த தீர்ப்பு பின்வருமாறு:

“இவ்வழக்கின் பிரிவு 98(1) அதன் தொடர்ச்சியான பிரிவு 106(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்பதற்கான காரணங்களை மன்று மேலே சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஏற்கனவே இடப்பட்ட கட்டளையில் மாற்றம் செய்ய வேண்டுமானால் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை பிரிவு 101(1) இன் கீழ் எதிர்மனுதாரர் சாட்சியங்களை முன்வைத்திருக்க வேண்டும்

ஆனால் சட்ட முறைகளுக்கு அமைவாக இவ்விண்ணப்பம் மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை. மேலும் இவ்வழக்கில் உள்ள பிரச்சனையை ஆரோக்கியமான, புத்திசாலித்தனமான, சட்டமுறையான நடவடிக்கைகள் மூலம் அனுகியிருக்க முடியும.; ஆவணங்களின் மூலம் உரிய நீதிமன்றின் மூன் சென்று தமது உரித்தை நிலைநாட்டியிருக்க முடியும்.

பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இந்த ஆர்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. அதை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலும் ஆர்பாட்டத்தை நடாத்துவதற்கு முனைந்துள்ளதுடன், நீதிமன்றக் கட்டளையை அவமதிக்கும் வகையில் கட்டளையைக் கிழித் தெறிந்து ‘ நீதிமன்றக் கட்டளையை மதிக்கும் இறுதிச் சந்தர்பம் இதுவாகும்’ எனவும் கோஷமிடப்பட்டுள்ளதாக மன்று அறிகிறது.

அதன்மூலம் சட்டத்தினை கையில் எடுக்கும் வகையிலும் அதனுர்டாக மக்களை தவறாக வழிநடாத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக எதிர்மனுதாரர்களுக்காக ஆஜராகும் ஒரு சில சட்டத்தரணிகளும் இருந்துள்ளார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் நீதித்துறைக்கு சவால் விடும் வகையிலும் மிரட்டல் விடும் வகையிலும் அமையும் என மன்று கருதுகிறது.

சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் சார்ந்த இவர்கள் இதனைக் கண்டிக்க முனையாததன் மூலம் அவர்களின் கடப்பாட்டிலிருந்து விலகியிருப்பதுடன் இத்தகைய செயலுக்கு உரமூட்டுவதாவே அமைகிறது

‘மக்களின் அவலங்களில் மீது அரசியல் நடத்தி மீண்டும் இருண்ட யுகத்திற்கு மக்களை இட்டுச் செல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது’ ஜனநாயக மறுப்பையும் ஆயுதக்கலாச்சரத்தையும் மீண்டும் முனைப்புடன் அரங்கேற்றுவதற்கான முயற்சியாகவே மன்று இதனைக் கருதுகின்றது.

மக்களை அரசியல் பகடைக்காய்களாக்கி அவலங்களில் மீது அரியனை ஏறும் முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளது.

இனக்குரோதங்களைத் தூண்டி இரத்தம் தோய்ந்த வரலாற்றை மீண்டும் இந்த மண்ணில் மேடைஏற்றுவதற்கான முயற்சியை மன்று எந்த வகையிலும் அனுமதிக்காது.

ஆகவே, மேற்கூறிய காரணங்களுக்காக அடிப்படை சட்ட முறையற்ற வகையில் செய்யப்பட்ட இவ்விண்ணப்பத்தை மன்று நிராகரிப்பதுடன் ஏற்கனவே வழங்கப்பட்ட தடைக் கட்டளையை மன்று உறுதி செய்கிறது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *