புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு வடபகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை கவிழ்ந்த பின்னர் அப்படகில் பயணித்த சுமார் 136 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவின் வடக்கில் 107 மைல் தொலைவில் வணிக மற்றும் கடற்படை படையினரின் கப்பல்கள் மீட்புப் பணி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கடற்படை பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறினார். இக்கப்பலில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார். 136 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இக்கப்பலில் 150 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரமும் 200 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு பகுதியில் கவிழ்ந்ததைத் தொடர்ந்து 110 பேர் காப்பாற்றப்பட்டிருந்ததுடன், 6 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.