இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது தீவிரவாதத் தாக்குதல்களிற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்ற எச்சரிக்கையைக் கருத்திற் கொள்ளப்போவதில்லை எனவும், இங்கிலாந்திற்கான தென்னாபிரிக்காவின் கிரிக்கெட் சுற்றுலா திட்டமிடப்பட்டபடி இடம்பெறும் எனவும் தென்னாபிரிக்கக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் போது லண்டனில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான கணிசமான வாய்ப்புக்கள் காணப்படுவதாக இங்கிலாந்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் அறிக்கை தெரிவித்திருந்தது.
குறித்த அறிக்கையைத் தாங்கள் இன்னமும் ஆராயவில்லை எனத் தெரிவித்த தென்னாபிரிக்கக் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, தாங்கள் தங்களின் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு அறிக்கைகளைக் கோருவோம் எனவும், அந்த அறிக்கைகளையே தாங்கள் ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் புதியனவல்ல எனத் தெரிவித்த அவர், ஒலிம்பிக் போன்ற பெரிய நிகழ்வுகள் நடத்தப்படும் போது இவ்வாறான தீவிரவாத அச்சுறுத்தல்கள் காணப்படுவது சாதாரணமானது எனவும் தெரிவித்தார்.
அதன் காரணமாக இதுகுறித்துத் தாங்கள் அதிகமாகக் கரிசனைப் படத் தேவையில்லை எனத் தெரிவித்த அவர், எனினும் அதுகுறித்து ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் எச்சரிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்த தென்னாபிரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான கல்வியோடு சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர், உலகின் கவனத்தை தங்களது பக்கம் ஈர்க்க வைக்க விரும்பும் எவரும் இத்தகைய தாக்குதல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.