அறுபட்டு
நாட்களாகி
சீழ் புதைந்து செயலிழந்த
கைகளோரம்
மரண ரேகை
நீண்டூர்ந்து ஓடிய நொடியில் ..!!
செல் உடைத்துத்
துளையிட்டு
குருதிக் கறைபடிந்த
சுவர்வழி வீழ்ந்த
ஞாயிற்றுக் கீற்றுக்கள்
சொர்க்க நரகக்
கலவி நிலை உணர்த்தின…!!!
சப்பாத்து ஓசையில்
அடிக்கடி கிழிந்த
நெஞ்சை
மீளக் கிழித்து
யமன் என்னைச்
சங்கரிக்கப் பார்க்கின்றான்
இரா
நீண்டு போனது
அங்கேயோர்
அவளைப் பெண் உடல்
அநாதரவாக -அவள்
பிதுக்கப்பட்ட மார்புகளில்
பிளந்து வீழ்ந்த
நரம்புவழி சொட்டிய
குருதிச் சொட்டுக்களை
பாலென நினைத்துப்
பருகுமவள் பெண் சிசு …!!!
மறுதிசையில் ஓர்
பள்ளிச் சிறுமி
பருவமடையாதவள்
பல ஆண் ஆயுதங்களால்
வெறி கொண்டு
சிதைக்கப்பட்டிருந்தாள்
பிணமான பின்னும்..
ஆண்டவனுக்கு
ஆயிரங் கண் என்றவனை
கொலை
வெறியோடு நிந்தித்தேன்
ஓர் கண் கூட நமக்காய்த்
திறக்காத
பொழுதுகளில் …\
அப்பா
பசிக்கிறது…!!
இன்னும் எனில்
நம்பிக்கையிழக்கா
என் மகனின்
வெள்ளையாடைகள்
கொடியில்
காற்றில் ஆடின ..!!
தொலைவில்
மணல் வெளியில்
ஏதுமறியாப்
பிஞ்சுக் கரமொன்று
மணலில்
புத்தர் உருவம் வரைகின்றது???