விண்வெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எக்ஸ்கேலிபர் நிறுவனம் புதிய யுக்தியை கையாள இருக்கிறது. இதுவரை விண்வெளிக்கு செல்பவர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் வரை மட்டுமே சென்று விட்டு பின் பூமிக்கு திரும்பி விடுவர். வருகிற 2015-ஆம் ஆண்டில் இருந்து நிறைவேற்றப்படும் இத்திட்டத்திற்காக தற்போது அந்நிறுவனம், கடந்த காலத்தில் உளவு வேலைக்காக பயன்படுத்தப்பட்ட ரஷ்ய விண்கலங்களை விலைக்கு வாங்குகிறது. ரஷ்ய நிறுவனமான என்.பி.ஓ. மஷினோஸ்ட்ராயீனியாவிடம் இருந்து 4 விண்கலங்கள் மற்றும் இரு விண்வெளி நிலையங்களை வாங்கி அவை புதுப்பிக்கப்படுகின்றன.

பின்னர், சுற்றுலா பயணிகள் விண்வெளி பயணமாக ஏதேனும் ஒரு விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவர். பின் அங்கிருந்து பயணித்து 2,34,000 மைல்கள் தொலைவில் நிலவின் சுற்று வட்ட பாதைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதற்கு 8 மாத பயணம் தேவைப்படும். இதை தொடர்ந்து விண்வெளியை சுற்றி பயணம் தொடரும். விண்வெளி பயணிகளுக்கு வசதி செய்து தருவதில் உலகின் 5ஆவது இடத்தில் உள்ள இந்நிறுவனம் கடந்த செவ்வாய் அன்று லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் தனது விண்கலம் ஒன்றை இயக்கி காட்டி சுற்றுலா பயணிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் இதற்காகும் செலவு ரூ.881 கோடியே 36 லட்சத்து 10 ஆயிரத்தை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *