உணவு நஞ்சாகியதால் பதுளை, ஹாலிஎல பிரதேசத்திலுள்ள சென். ஜேம்ஸ் தோட்டப் பாடசாலை மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் நேற்று பாதிக்கப்பட்டு பதுளை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவே நஞ்சானதால் மாணவர்கள் சிலர் மயக்கமடைந்ததுடன் வாந்தி, வயிற்று வலிக்கும் உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டதாக பதுளை ஆஸ்பத்திரி உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

பாடசாலை வட்டாரங்கள் இது பற்றித் தெரிவிக்கையில்: நேற்றுக்காலை மாணவர்களுக்கு சோற்றுடன் முட்டை வழங்கப்பட்டதாகவும் முட்டையே உணவு நஞ்சாக காரணமாகியிருக்கலாம் எனவும் சுமார் 120 மாணவர்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகி பதுளை அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தாகவும் தெரிவித்தன.

பாடசாலையில் நேற்று விநியோகிக்கப்பட்ட உணவு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் உணவு வழங்கிய கொந்தராத்துக் காரர்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

காலை உணவு உண்ட பின்னர் சில நிமிடங்களிலேயே மாணவர்கள் சிலர் வாந்தியெடுத்தும் மயங்கியும் உள்ளனர். இதனையடுத்து உடனடியாக மாணவர்கள் பதுளை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஒரே தடவையில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பதுளை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டதுடன் நிலைமையைச் சமாளிப்பதில் டாக்டர்கள் குழுவாக இணைந்து செயற்பட்டதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி உணவு எந்தவித பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாத நிலையிலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தப் பாடசாலைக்கு இரண்டு ஒப்பந்தக்காரர்கள் உணவுகளை விநியோகிப்ப துடன் அதில் ஒரு பகுதியினரின் உணவே இவ்வாறு நஞ்சாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *