சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 5 ஆண்டுகளாக கேப்டனாக இருந்து வழிநடத்திய இந்திய கேப்டன் டோணி, தற்போது அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்பட உள்ள நேபாள அணிக்கு டோணி தலைமை வகிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 2008ம் ஆண்டு துவக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர், இந்திய கேப்டன் டோணி. கடந்த 5 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ஐபிஎல் தொடரில் வழிநடத்தி வருகிறார். இவரது சிறப்பான வழிநடத்தல் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.கடந்த மே மாதம் முடிவடைந்த ஐபிஎல் 5 தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், தற்போது கேப்டன் டோணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பிசிசிஐ உறுப்பினர்களின் கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தொடரின் கமிஷனர் ராஜீவ் சுக்லாவிடம் ஐபிஎல் தொடரில் புதிதாக நேபாளத்தை சேர்ந்த அணியை சேர்க்கப்படலாம் என்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஐபிஎல் தொடரில் இருந்து கொச்சி துஷ்கர்ஸ் கேரளா அணி நீக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு 9 அணிகளுடன் போட்டிகளை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஒரு வெளிநாட்டு அணியை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக நேபாளத்தை சேர்ந்த கோர்கா பிரிக்கேடு என்ற அணிக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2013ம் ஆண்டு முதல் நேபாள அணி, ஐபிஎல் தொடரில் பங்கேற்கலாம் என்றார்.

இந்த நிலையில் நேபாளத்தை சேர்ந்த கோர்கா பிரிக்கேடு அணிக்கு கேப்டனாக செயல்படுமாறு டோணிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், பிசிசிஐ தலைவருமான என்.சீனிவாசன் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த டோணி,

நேபாள அணிக்கு கேப்டனாக செயல்படுமாறு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் தான் கூறினார். ஒரு வெளிநாட்டு அணியை ஐபிஎல் தொடரின் மூலம் வழிநடத்துவது ஒரு புதிய அனுபவமாக கருதுகிறேன் என்றார்.இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் என்.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்தியாவின் அண்டை நாடாகவும், ஒரு இந்து நாடாகவும் உள்ள நேபாளத்தை சேர்ந்த அணியை ஐபிஎல் தொடரில் வழிநடத்த, சிறந்த கேப்டனை அவர்களுக்கு அளித்துள்ளேன். வளர்ந்து வரும் ஒரு வெளிநாட்டு கிரிக்கெட் அணிக்கு, இந்த உதவியை செய்வதை எனது கடமையாக கருதுகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக உள்ள டோணி தன்னுடன், சில வீரர்களை நேபாள அணிக்கு அழைத்து செல்ல உள்ளாராம்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பெயர்கள் அடிபடுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தை சேர்ந்த கோர்கா பிரிக்கேடு அணிக்காக விளையாட உள்ள வீரர்கள் மற்றும் அணியின் தூதர் ஆகியவை குறித்து முடிவெடுக்கும் ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டோணி விலக வாய்ப்புள்ளதால், சென்னை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *