ஒரு மொழியின் இலக்கணம் என்பது அதனை தாய் மொழியாகக் கொண்டோரும் எழுத்தாளர்களும் அக் குறிப்பிட்ட மொழியிலுள்ள சொற்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதன் பகுப்பாய்வே ஆகும்.
ஒரு மொழியை பகுப்பாய்வு செய்வதற்கு பல வழிகள் உள்ளன. அத்தகைய ஒரு ஆய்வில் ஒவ்வொரு சொற்களும் செய்யும் செயற்பாட்டைப் பொறுத்து அவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக பெயரிடும் சொற்கள் பெயர்ச் சொற்கள் (Nouns) எனக் கூறப்படும். ஏதாவது ஒரு செயற்பாட்டைக் குறிக்கும் சொற்கள் வினைச் சொற்கள் (Verbs) எனக் கூறப்படும்.
மேலும், ஒரு ஆங்கிலச் சொல்லானது ஒன்றுக்கு மேற்பட்ட செயற்பாடுகளை செய்யவல்லது என்பதனை நிச்சயம் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பின்வரும் வாக்கியங்களில் தடித்த எழுத்துக்களில் உள்ள சொற்களை பெயர்ச் சொற்கள் (Nouns) என கூற முடியும். ஏனெனில் அவை பொருட்களைப் பெயரிடுகின்றன.
உதாரணம்
1.I have lost my comb.
2.Water is one of the necessities of life.
மேலுள்ள வாக்கியங்களில் water, comb ஆகிய சொற்கள் பெயர்ச்சொற்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் கீழுள்ள இரு வாக்கியங்களிலும் இச் சொற்கள் வினைச் சொற்களாக பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணம்
3. I comb my hair every morning.
4.Do you water your plants once a week?
இங்கே பயன்படுத்தப்படும் பெயர்ச்சொல், வினைச்சொல், சுட்டுப்பெயர் (pronoun) ஆகியவை ஆங்கில மொழி செயல்பாட்டு முறையை விளக்க பயன்படுத்தப்படும் சொற்களாகும்.