கோலாலம்பூர்:ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயது) தொடரின் பைனலுக்கு இளம் இந்திய அணி முன்னேறியது. நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான அரையிறுதியில், உன்முக்த் சந்த் சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயது) தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் சனிதா டி மெல், பேட்டிங் தேர்வு செய்தார்.
வீரக்கோடி அரைசதம்:
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பபாசாரா வாடுகே (45) நல்ல துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த ஷிஹன் பெர்ணான்டோ (18), செபஸ்டியன் பெரேரா (3), ஆங்கிலோ ஜெயசிங்கே (26) நிலைக்கவில்லை. பின் இணைந்த சான்டுன் வீரக்கோடி (73), நிரோஷன் டிக்வெல்லா (66) அரைசதம் அடித்து கைகொடுத்தனர். இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பாபா அபராஜித், ஹர்மீத் சிங் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
உன்முக்த் அபாரம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மனன் வோஹ்ரா (17) ஏமாற்றினார். அடுத்து வந்த பாபா அபராஜித் (23) சோபிக்கவில்லை. பின் இணைந்த உன்முக்த் சந்த், விஜய் ஜோல் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இலங்கை பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த போது விஜய் ஜோல் (54) அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக ஆடிய உன்முக்த் சந்த் சதம் அடித்தார். இவர், 116 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்திய அணி 47.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜூலை 1ம் தேதி நடக்கவுள்ள முக்கியமான பைனலில் இந்திய அணி, “பரம எதிரியான’ பாகிஸ்தானை சந்திக்கிறது.
