இலங்கையில் கப்பல் கட்டும், மற்றும் திருத்தும் டொக்யாட் ஒன்றை அமைப்பதற்கு சவூதி அரேபிய முன்னனி நிறுவனமான ஹாதி ஹமாம் குறூப் நிறுவனம் முன்வந்துள்ளது. 100க்கு மேற்பட்ட கப்பல்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இலங்கையில் சீ கல்ப் சிப்யாட் எனும் தனியார் நிறுவனம் ஊடாக முதலீடு செய்துள்ளது.

காலி துறைமுகத்தில் அமைக்கப்படவிருக்கும் இந்த நிலையத்திக்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவகத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பு முதலீட்டுச் சபை தலைமையகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

முதலீட்டுச் சபை தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ முன்னிலையில் சீ கல்ப் சிப்யாட் நிறுவன தலைவர் ஹாதி ஹமாம் மற்றும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹாபிஸ் நஸீர் அஹமத் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

முதற்கட்டப் பணிக்காக 550 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக முகாமைத்துவப் பணிப்பாளர் ஹாபிஸ் நஸீர் அஹமத் தெரிவித்தார்.

புனித ரமழான் முடிவடைந்ததும் அதன் பணிகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் சமார் ஐயாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவிதார்.

இதேவேளை ஹாதி ஹமாம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பெற்றோலியவள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, துறைமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *