கியிவ்:யூரோ கோப்பை தொடரில் இன்று நடக்கும் விறுவிறுப்பான பைனலில் “நடப்பு சாம்பியன்’ ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதுகின்றன. இதில் ஸ்பெயின் மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லுமா அல்லது இத்தாலி 44 ஆண்டுகளுக்குப் பின் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும், 14வது யூரோ கோப்பை தொடர் போலந்து மற்றும் உக்ரைனில் நடக்கிறது. ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் போன்ற அணிகள் நடையை கட்டிய நிலையில், இன்று நடக்கும் பைனலில் ஸ்பெயின் அணி, இத்தாலியை சந்திக்கிறது.
தக்க வைக்குமா:
“யூரோ’ தொடரில் களமிறங்கும் போது ஸ்பெயின் அணி, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து 14வது வெற்றி பெற்ற சாதனையுடன் களமிறங்கியது. இத்தாலியுடனான முதல் போட்டி “டிரா’ ஆக, இந்த அணியின் வெற்றிநடை முடிவுக்கு வந்தது. காலிறுதியில் பிரான்சை வென்ற ஸ்பெயின், அரையிறுதியில் போர்ச்சுகலை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது.
தாக்குதல் பலவீனம்:
இம்முறை மீண்டும் கோப்பை வெல்லும் நோக்கத்தில் உள்ள ஸ்பெயின் அணிக்கு 2008 யூரோ, 2010 உலக கோப்பை வெற்றிக்கு காரணமான கார்லஸ் புயோல், டேவிட் வில்லா ஆகியோர் இல்லாதது வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அணியின் தாக்குதல் ஆட்டம் பெரும் பலவீனமாகியுள்ளது. போர்ச்சுகல் அணிக்கு எதிரான அரையிறுதியில் இது நன்கு வெளிப்பட்டது.
அதேநேரம், அரையிறுதியில் களமிறங்காத பெர்னாண்டோ டோரஸ், இன்று விளையாடுவார் என்பதால், சற்று பலம் கூடலாம். அணியின் கேப்டன் மற்றும் கோல் கீப்பர் கேசியாஸ், “சூப்பர் பார்மில்’ உள்ளதால், இவரை மீறி கோல் அடிப்பது இத்தாலிக்கு சிரமம் தான். சேவி ஹெர்னாண்டஸ், சாவி, இனியஸ்டா, பேப்ரிகாஸ் ஆகிய முன்னணி வீரர்களும் கைகொடுக்க தயாராக உள்ளனர்.
கறுப்புக் குதிரை:
இத்தொடர் துவங்கும் முன், இத்தாலி அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கித் தவித்தது. கடந்த 2010 உலக கோப்பை தொடரில், லீக் சுற்றுடன் வெளியேறிய இந்த அணி, இம்முறையும் அடுத்த சுற்றுக்கு முன்னேறாது என்று கணிக்கப்பட்டது.
இதற்கேற்ப முதல் இரு போட்டிகளை (ஸ்பெயின், குரோஷியா) “டிரா’ செய்து, கடைசியில் அயர்லாந்தை வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது. பின் இங்கிலாந்தை சாய்த்த இந்த அணியின் எழுச்சியில், “ஜாம்பவான்’ ஜெர்மனி காணாமல் போனது.
இத்தொடரில் “கறுப்பு குதிரையாக’ செயல்பட்ட இத்தாலி, அனைத்து கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி, பைனலுக்கு வந்துள்ளது.
கிடைக்குமா “கோல்டன் ஷூ’:
கேப்டன் புபான் தலைமையிலான இந்த அணியில் அன்டோனியா கேசானோ, ஆன்ட்ரியா பிர்லோ, லியானார்டோ பனூச்சி, டேனியலி டி ரோசி போன்ற அசத்தல் வீரர்கள் இருப்பதால், ஸ்பெயினுக்கு சிக்கல் காத்திருக்கிறது.
ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் 2 கோல் அடித்து அசத்திய மரியோ பலோடெலி, இன்று மீண்டும் ஒரு கோல் அடித்து வெற்றிக்கு கைகொடுக்கும் பட்சத்தில், “கோல்டன் ஷூ’ விருதை தட்டிச் செல்லலாம்.
44 ஆண்டுகளுக்குப் பின்…
கடந்த தொடரில் கோப்பை வென்ற ஸ்பெயின் அணி, மீண்டும் சாதிக்கும் நோக்கத்தில் உறுதியாக உள்ளது. ஆனால், கடந்த 1968 ல் கோப்பை வென்ற பின், 2000ல் பைனலில் பிரான்சிடம் கோப்பை இழந்தது இத்தாலி. தற்போது மூன்றாவது முறையாக பைனலுக்கு வந்துள்ள இந்த அணி, 44 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன் பட்டம் வென்று சாதிக்க காத்திருக்கிறது.
மறுமுனையில், நான்காவது முறையாக பைனலுக்கு வந்த ஸ்பெயின் அணி, இதற்கு அவ்வளவு எளிதில் வழி விடாது என்பதால், கால்பந்து ரசிகர்களுக்கு விறு விறுப்பான போட்டி காத்திருக்கிறது.
வரலாறு திரும்புமா
கடந்த 2006 “பிபா’ உலக கோப்பை தொடர் துவக்கத்தின் போது, இத்தாலி அணியில் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இத்தொடரில் இத்தாலி கோப்பை வென்று அசத்தியது. தற்போது “யூரோ’ தொடர் துவங்கும் முன், சூதாட்ட புகார் காரணமாக முன்னணி வீரர் கிறிஸ்சிடோஸ், அணியில் இருந்து நீக்கப்பட்டார். மற்ற வீரர்களிடம் விசாரணை நடந்தது. இத்தாலி கால்பந்து அணியை 2 ஆண்டுகளுக்கு தடைசெய்யலாம் என பரிந்துரைத்தார் பிரதமர் மரியோ மாண்டி. இத்தனை சிக்கல்களுக்கு இடையில் பைனலுக்கு முன்னேறிய இந்த அணி, “யூரோ’ கோப்பை வென்று வரலாறு படைக்கும் என்று நம்பப்படுகிறது.
வெற்றி எங்களுக்கே
பைனல் குறித்து ஸ்பெயின் வீரர் நேகிரடோ கூறுகையில்,””கடந்த நான்கு ஆண்டுகளில், மூன்று முக்கிய தொடர்களின் பைனலுக்கு முன்னேறியுள்ளோம். மீண்டும் இம்முறை வரலாறு படைப்போம். இது எனது கால்பந்து வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது. ஸ்பெயின் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையலாம்,” என்றார்.
கடைசிவரை போராடுவோம்
இத்தாலி அணி வீரர் ஆன்ட்ரியா பிர்லோ கூறுகையில்,”” 2006 உலக கோப்பை தொடருக்குப் பின் அணியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. தற்போது, யூரோ பைனலுக்கு முன்னேறியுள்ளோம். இப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு எதிராக விளையாடியதைப் போல, ஸ்பெயினுடன் கடும் போராட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறோம்,” என்றார்.
ரூ. 53 கோடி யாருக்கு
யூரோ கோப்பை தொடரில் பரிசுப் பணத்துக்கு பஞ்சமே இல்லை. இத்தொடரில் பங்கேற்ற 16 அணிகளுக்கும், தலா ரூ. 56 கோடி முதலில் கொடுக்கப்பட்டன. இது தவிர, லீக் சுற்றின் ஒவ்வொரு வெற்றிக்கு ரூ. 7 கோடி, “டிரா’ செய்த அணிகளுக்கு ரூ. 3.5 கோடியும் தரப்பட்டது. புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்து வெளியேறிய அணிக்கு “போனசாக’ ரூ. 7 கோடி வழங்கப்பட்டது.
காலிறுதிக்கு தகுதி பெற்ற 8 அணிகளுக்கு, தலா ரூ. 14 கோடி, அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகளுக்கு தலா ரூ. 21 கோடியுடன், இன்றைய பைனலில் வெல்லும் அணி ரூ. 52 கோடி, தோற்கும் அணி ரூ. 31 கோடியும் பரிசாக பெறும். மொத்தத்தில் இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 1,375 கோடி.
வரலாறு படைக்குமா
கடந்த 2008ல் நடந்த யூரோ கோப்பை பைனலில் ஸ்பெயின் அணி, ஜெர்மனியை வென்றது. பின், 2010 உலக கோப்பை பைனலில் ஸ்பெயின், நெதர்லாந்தை வீழ்த்தியது. இப்போது “யூரோ’ தொடரில் (2012), ஸ்பெயின் பைனலுக்கு முன்னேறியுள்ளது. இதிலும் ஸ்பெயின் சாதிக்கும் பட்சத்தில், தொடர்ந்து மூன்று பெரிய தொடர்களில் கோப்பை வென்ற அணி என்ற வரலாறு படைக்கலாம்.
இதுவரை இவ்விரு அணிகள்…
“யூரோ’ கோப்பையில் இவ்விரு அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக விளையாடிய நான்கு போட்டியில் இத்தாலி அணி ஒரே ஒரு முறை (1988) வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் “டிரா’ ஆனது. ஸ்பெயின் அணி ஒரு முறை கூட வென்றது கிடையாது. ஆனால் 2008ல் நடந்த “யூரோ’ கோப்பை காலிறுதியில் இவ்விரு அணிகள் மோதிய போட்டி 0-0 என “டிரா’ ஆனது. பின், “பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் ஸ்பெயின் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
* “யூரோ’ கோப்பை அரங்கில், கடைசியாக இந்த அணிகள் ஜிடன்ஸ்க் (போலந்து) நகரில் நடந்த “யூரோ-2012′ லீக் போட்டியில் மோதின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் “டிரா’ ஆனது.
* “யூரோ’ கோப்பை பைனலுக்கு மூன்றாவது முறையாக முன்னேறி உள்ள இத்தாலி அணி, ஒரே ஒரு முறை (1968) மட்டும் கோப்பை வென்றது. கடந்த 2000ம் ஆண்டு நடந்த “யூரோ’ தொடரில் இரண்டாவது இடம் பிடித்தது.
* “யூரோ’ கோப்பை பைனலுக்கு நான்காவது முறையாக தகுதி பெற்றுள்ள ஸ்பெயின் அணி, இரண்டு முறை (1964, 2008) கோப்பை வென்றது. கடந்த 1984ல் நடந்த “யூரோ’ தொடரில் இரண்டாவது இடம் பிடித்தது.
* “யூரோ’ கோப்பை வரலாற்றில் ஸ்பெயின் அணி விளையாடிய 35 போட்டியில் 16 வெற்றி, 8 தோல்வியை பெற்றுள்ளது. 11 போட்டிகள் “டிரா’ ஆனது. இத்தாலி அணி விளையாடிய 32 போட்டியில் 13 வெற்றி, 4 தோல்வியை பதிவு செய்துள்ளது. 15 போட்டிகள் “டிரா’ ஆனது.
சர்வதேச அளவில் எப்படி
சர்வதேச கால்பந்து அரங்கில் ஸ்பெயின் – இத்தாலி அணிகள் 30 முறை மோதி உள்ளன. இதில் இத்தாலி 10, ஸ்பெயின் 8 போட்டியில் வெற்றி பெற்றன. 12 போட்டிகள் “டிரா’ ஆனது.
* “பிபா’ உலக கோப்பை, “யூரோ’ கோப்பை போன்ற மிகப் பெரிய தொடரின் பைனலில் இந்த அணிகள் மோதுவது இதுவே முதன்முறை. அதிகபட்சமாக இவ்விரு அணிகள் மிகப் பெரிய தொடரில் காலிறுதியில் நான்கு முறை மோதி உள்ளன.
* “பிபா’ உலக கோப்பை தொடரில் இவ்விரு அணிகள் மூன்று முறை மோதி உள்ளன. இதில் இத்தாலி 2 போட்டியில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி “டிரா’ ஆனது. ஸ்பெயின் அணி ஒரு போட்டியில் கூட வென்றது கிடையாது. கடைசியாக 1994ல் நடந்த உலக கோப்பை தொடரின் காலிறுதியில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
* “நட்பு’ ரீதியிலான போட்டியில் இவ்விரு அணிகள் 23 முறை மோதி உள்ளன. இதில் ஸ்பெயின் 8, இத்தாலி 7 போட்டியில் வெற்றி பெற்றன. எட்டு போட்டிகள் “டிரா’ ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *