நடிகர் கார்த்தி நடித்த சகுனி திரைப்படம் மதுரை தங்கரீகல் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. நேற்று மாலை நடிகர் கார்த்தி, இயக்குனர் ஷங்கர் தயாள் ஆகியோர் வந்தனர்.

பின்னர் ரசிகர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்டனர்.

கேள்வி:- நடிகை அனுஷ்கா உங்கள் அண்ணன் சூர்யாவுடன் நடித்துள்ளார். நீங்கள் ஒரு படத்தில் அவருடன் நடித்து வருகிறீர்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- இதில் நினைக்க என்ன இருக்கிறது? அனுஷ்கா ஒரு சிறந்த நடிகை. கடின உழைப்பாளி. நாங்கள் நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் ஓடும் ரெயிலில் ஒரு சண்டைக்காட்சி உள்ளது. அதில் ரெயிலின் மேல் பகுதியில் நாங்கள் ஓட வேண்டும். மிகவும் கஷ்டமாக இருந்த அந்த காட்சிகளில் டூப் போட்டுக் கொள்ளமாட்டேன் என்று கூறி துணிச்சலாக நடித்தார். எந்த பாத்திரத்திலும் துணிச்சலாக நடிக்கக் கூடியவர். அவரது உழைப்புதான் அவரது வெற்றிக்கு காரணம்.

கேள்வி:- எந்த கதாநாயகியுடன் இணைந்து நடிக்க ஆசை?

பதில்:- இந்த கேள்விக்கு என்ன பதில் கூறுவது? சரி… உங்களுக்காக பதில் சொல்கிறேன். எனக்கு அமலா, ஜெயப்பிரதா ஆகியோரை மிகவும் பிடிக்கும் எனவே அவர்களுடன் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளது. அது முடியுமா?

கேள்வி:- உங்களுடன் நடித்த நடிகைகளில் உங்களுக்கு பிடித்தவர் யார்?

பதில்:- எதற்கு சிக்கல்… எல்லோரையும் பிடிக்கும்.

இவ்வாறு கார்த்தி பதில் அளித்தார்.

பின்னர் நடிகர் கார்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

சகுனி படம் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. 3 நாட்களில் சிறுத்தை படத்தின் வசூலை தாண்டியுள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை சிறப்பாக அமைந்துள்ளது. அரசியல் பின்னணி இல்லாமல் ஒரு அரசியல் கதையை காமெடியாக இயக்குனர் கூறியுள்ளார். பல புதிய விஷயங்களை கூறியுள்ளார்.

யாரையும் வருத்தப்பட வைக்கும் நோக்கத்தில் எந்த காட்சியும் அமைக்கவில்லை. பருத்திவீரன் படத்தில் நடித்தபோதே எனக்கு மதுரை மிகவும் பழக்கமாகி விட்டது. அது எப்போதும் என் மனதில் நிற்கும் படம். சந்தானம் சாதாரணமாக பேசுவதே காமெடியாக இருக்கும். படத்தில் அது இன்னும் சிறப்பாக வந்துள்ளது.
நடிகர் விக்ரம் எனது படங்களை பார்த்துவிட்டு உடனடியாக பாராட்டு தெரிவிப்பார். இந்த படத்தையும் பார்த்துவிட்டு அடுத்த தலைமுறை நடிகர்களில் முன்னணியில் இருப்பதாக கூறினார். குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு அரசியல் கதையை காமெடியாக சொல்லி இருப்பதுதான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *