பாடசாலைகளுக்கிடையிலான பாடுமீன்களின் சமர் எனும் வருடாந்த கிரிக்கட் போட்டியில் (பிக் மெச்) வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலை இவ்வருடம் சம்பியனாகியுள்ளது. லயன்ஸ் கழகத்தின் பிரதான அனுசரணையுடன் இன்று புதன்கிழமை வெபர் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
20 ஓவர் கொண்ட இப் போட்டியில், சிசிலியா பெண்கள் பாடசாலை 18.2 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலை 19.1 ஓவரில் 7 விக்கட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
வின்சன்ற் தேசியப்பாடசாலையைச் சேர்நத மதுமிதா முரளிதரன் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுக்களை வீழ்த்தியமைக்காக சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக சிசிலியா பெண்கள் பாடசாலையைச் சேரந்த எஸ்.விஜிவதனி 34 ஓட்டங்களைப் பெற்றமைக்காக விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.ஆட்டநாயகியாக 4 ஓவர்களில் 7 ஓட்டங்களைக் கொடுத்தமைக்காக ஆர்த்திகா விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.
சிறந்த இரண்டு பவுண்டரிகளை பெற்றமைக்காக சிசிலியா பெண்கள் பாடசாலையின் சேகரா பெர்னாண்டோபுள்ளே மற்றும் சிறந்த பவுண்டரியைப் பெற்றமைக்காக வின்சன்ற் பாடசாலையின் யசோதரா ஆகியோருக்கு விசேட கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன், பங்குபற்றிய அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதிழ்களும் பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்றுவரும் இவ்வருடாந்த போட்டிகளில் இரு பாடசாலைகளும் தலா இருதடவை வெற்றிபெற்றுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற சிசிலியா பெண்கள் தேசியப்பாடசாலை வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சத்தியநாதன் பிரதம அதிதியாகவும், லயன்ஸ் கழக முன்னாள் தலைவர் லயன் ஏ.செல்வேந்திரன், டயலொக் நிறுவனத்தின் மட்டக்களப்பு முகாமையாளர் பி.பிரதீப், யூனியன் வங்கியின் முகாமையாளர் கௌதம், சிசிலியா பெண்கள் தேசியப்பாடசாலையின் அதிபர் அருட் சகோதரி எம்.எலிசபெத்மற்றும், வின்சன்ற் மகளிர் உயர் தேசியப்பாடசாலை அதிபர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.