இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடருக்கான அணியில் இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங் இடம்பெற வேண்டும் என எதிர்பார்ப்பதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளர் க்ரிஷ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் காரணமாக ஐக்கிய அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுப் பின்னர் இந்தியா திரும்பிய பின்னர் பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ள சகல துறை வீரரான யுவ்ராஜ் சிங் தொடர்பாகவே பிரதம தேர்வாளர் தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.யுவ்ராஜ் சிங் தற்போது பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த க்ரிஷ் ஸ்ரீகாந்த் அது மிகவும் சிறப்பான விடயம் எனத் தெரிவித்தார். இந்திய அணிக்காக உலகக்கிண்ணத்தை வென்றுகொடுத்த வீரர் திரும்பவும் அணிக்குத் திரும்ப வேண்டும் எனத் தெரிவித்த அவர், அவரது மீள்வருகைக்காகக் காத்திருப்பதாகவும், அவர் அணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டித் தொடருக்கான அணி இம்மாத இறுதியில் தெரிவுசெய்யப்படும் எனத் தெரிவித்த அவர், இன்னமும் காலமிருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கை – இந்தியத் தொடருக்கான இந்திய அணியைத் தெரிவு செய்த பின்னரே ஸ்ரீகாந்த் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு உலகக்கிண்ணத்தை இந்திய அணி வெற்றிகொள்வற்கு முக்கிய காரணியாக அமைந்த யுவ்ராஜ் சிங், அத்தொடரின் நாயகன் விருதையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.