தனது அதிவேக குங்ஃபூ சண்டைகள் மூலம் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள சீன நடிகர் ஜாக்கிசான், ஆக்ஷன் படங்களில் இருந்து தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள சைனீஸ் ஸோடியாக் தான் தான் அதிரடி சண்டைகள் போடும் நாயகனாக வரும் கடைசி படமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

“நான் என் கலையுலக வாழ்க்கை நெடுகவும் அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்துவந்துள்ளேன். ஏதாவது ஒரு கட்டத்தில் அதற்கு ஒரு முடிவு வரத்தான் வேண்டும். நானே நடித்து, இயக்கி, தயாரித்து, சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள இந்தப் படத்துடன் இந்த அறிவிப்பை செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.” என்றார் ஜாக்கிசான்.

அதிரடி நாயகன் என்ற நிலையிலிருந்து தான் ஓய்வுபெற்றாலும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய பாத்திரங்களில் தான் தொடர்ந்து நடிக்கப்போவதாக ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.

நாற்பது ஆண்டுகாலமாக சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்து வந்துள்ள ஜாக்கிசான் மயிர்க்கூச்செரிய வைக்கும் சாகசங்களை திரையில் நிகத்தி உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள நடிகர் ஆவார்.

சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது பல தடவைகளில் உடலில் கடுமையாக அடிபட்டு காயங்களுக்கும் எலும்பு முறிவுகளுக்கும் ஆளானவர் இவர்.

ஐம்பத்தெட்டு வயதாகும் ஜாக்கிசான் தனக்கு சகல விதமான உடல் வலிகளும் இருப்பதாகக் கூறுகிறார்.நடிகர் ராபர்ட் டி நீரோ மாதிரி நடிப்புத் திறமையை வெளிப்படுத்த தான் விரும்புவதாக ஜாக்கிசான் தெரிவித்துளார்.

சைனீஸ் ஸோடியாக் படம் பிரான்ஸின் கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

ஆர்மர் ஆஃப் கார்ட் படத்தின் வரிசையில், ஜாக்கிசான் பொக்கிஷங்களை தேடிப்போகும் கதையம்சம் கொண்ட ஆக்ஷன் படமாக சைனீஸ் ஸோடியாக் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *